2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சுவைமிகு நிகழ்வு

Editorial   / 2022 ஜனவரி 13 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர். ராஜலிங்கம்

இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம்  பெருங்காவியத்தை முதன்முதலில் எமுதியவர் வால்மீகி முனிவர். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இராமாயணத்தை நாம் தமிழில் அறிந்துகொள்ள நமக்கு உதவியாக இருப்பது அரிய பொக்கிஷமான கம்பராமாயணம் ஆகும். சமஸ்கிருதத்தில் உள்ள இராமாயணம் தமிழில் வெளிவருவதற்கு அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட சில முயற்சிகள் பற்றிய தகவல்கள் மிகவும் சுவையானவை. அந்த சுவையான நிகழ்வு பற்றி இங்கு பார்ப்போம்.

குலோத்துங்க சோழ மன்னனின் ஆட்சிக்காலத்தில் திருவெண்ணெய் நல்லூர் என்னும் ஊரில் சடையப்ப முதலியார் என்னும் செல்வந்தர்  ஒருவர் இருந்தார். அவருக்கு மகா காவியமான ஸ்ரீமத் இராமாயணம் தமிழில் பாடப்பட வேண்டும் என்று ஓர் ஆசை ஏற்பட்டது. அக்காலத்தில் தமிழ் வித்வான்களில் அதிசிரேஷ்டராக விளங்கிய கம்பரே இதற்குப் பொருத்தமானவர் என்று அவர் உணர்ந்தார். கம்பருக்கும் அவருக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் கம்பரின் புலமை மீது அவருக்கு மிகுந்த பற்றுதல் இருந்தது. அதனால் ஒருசமயம் அவர் கம்பரை அணுகி 'ஐயா தாங்கள் பிரபல கவிஞராக இருக்கிறீர்கள். அதனால் தங்களுடைய பெயர் நிலை பெற்றிருக்கும் வகையிலும் தமிழ் மக்களுக்கு பயன்படும் வகையிலும் சமஸ்கிருதத்தில் இருக்கும் ஸ்ரீமத் ராமாயணத்தை தமிழில் செய்யுங்கள். அது எதிர்கால சந்ததியினருக்கும் மிகுந்த பயனுடையதாக இருக்கும். உங்களுக்கும் புண்ணியம் ஆகும்'என்று கூறினார்.

'நல்லது அப்படியே செய்கிறோம்' என்று கூறினார் கம்பர். ஆனால் பல நாட்களாகியும் கம்பர் எதுவும் செய்யாமல் இருந்தார். இதனை புரிந்து கொண்ட  சடையப்ப முதலியார் நாம் சொல்வது இவருக்கு அலட்சியமாக இருக்கிறது. சொல்ல வேண்டியவர் சொன்னால் இவர் செய்வார் என்று நினைத்துக்கொண்டு குலோத்துங்க சோழ மன்னனை சநதிக்கச்சென்றார். மன்னரிடம் அதைப் பற்றிக் கூறினார். மன்னர் அதற்கு தனக்குள் சிந்தித்து ;நாம் கம்பரை மட்டும் பாடச் சொன்னால் எப்படியும் தாமதமாகத்தான் செய்யும். ஒட்டக்கூத்தரையும் அழைத்து கம்பரையும் அவரையும் தனித்தனியே பாடச் சொன்னால் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பாடி முடிப்பார்கள்;; என்று கூறினார். முதலியாருக்கும் அதுவே சரியென்று தோன்றியது. ஏனெனில் கம்பரைப்போன்று ஒட்டக்கூத்தரும் அக்காலத்தில் சிறந்த புலவராக விளங்கினார்.

 அதன்படியே இரண்டு புலவர்களையும் அழைத்து சமஸ்கிருதத்தில் இருக்கும் ஸ்ரீமத் இராமாயணத்தை தமிழில் பாடுமாறு கூற இருவரும் அதற்கு சம்மதித்தனர். நாட்கள் கடந்தன.

ஒட்டக்கூத்தர் தமக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை பெரும் பாக்கியமாகக் கருதி பாலகாண்டம் முதல் ஐந்து காண்டம் பாடி ஆறாவது காண்டத்தில் கடல் காண் படலம் வரை பாடினார். கம்பர் அதுவரை தெய்வ வணக்கம்கூடப்பாடவில்லை. இதனைப் புரிந்துகொண்ட முதலியார் மன்னரிடம் சென்று அவரிடம் கம்பரையும் ஒட்டக்கூத்தரையும் இராமாயணம் பாடச் சொன்னீர்கள். அவர்கள் எவ்வளவு பாடியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நீங்கள் அதைப்பற்றி அவர்களை அழைத்து கேட்காமல் இருக்கின்றீர்களே. இது தர்மமா?;; என்று கேட்டார். அதனை அடுத்து அரசர் கம்பரையும் ஒட்டக்கூத்தரையும் அழைத்து இராமாயணம் எவ்வளவு பாடி இருக்கிறீர்கள்?என்று கேட்டார்.

அதற்கு ஒட்டக்கூத்தர் கடல்காண் படலம்வரை பாடியுள்ளதாகக் கூறினார். மன்னர் கம்பரிடம் நீங்கள் எவ்வளவு  பாடியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். கம்பர் அதற்கு ஒட்டக்கூத்தரைவிட தான் அதிகமாக பாடியிருப்பதாகக் கூறவேண்டும் என்று நினைத்து அந்த சந்தர்ப்பத்தில் பொய் பேசுவதும் அவசியமாக இருந்ததால் நாம் இப்பொழுது சொல்லும் பொய் எவருக்கும் எந்த தீமையும் ஏற்படுத்தாது. அதனால் இந்த சந்தர்ப்பத்தில் பொய் சொல்லத்தான் வேண்டும் என்று நினைத்துக்கொண்டு கடல்காண்படலத்துக்கு அடுத்துள்ள திருவணைப்படலம்வரை பாடி உள்ளோம்; என்று கூறினார். உடனே மன்னர் எங்கே அதனைப்பாடுங்கள் கேட்போம்; என்று கூறினார்.

சிறந்த புலமைத்துவமுள்ளவரான கம்பர், உடனே அதை மட்டும் 70 செய்யுள்களில் பாடி பிரசங்கிக்கத் தொடங்கினார்.

 சமுத்திரத்தில் வாராவதி கட்டும் வகையில் சுக்ரீவன் ஆணையால் வானர வீரர்களும் படைத்தலைவர்களும் காட்டில் உள்ள மலைகளை பிடுங்கிக்கொண்டு வருவதைப் பற்றி பிரசங்கிக்கும் இடத்தில்

;குமுதனிட்ட குலவரை கூத்தரின்

திமிதமிட்டு திரியும் திரைகடல்

துமிதமூர்புக வானவர் துள்ளினார்

அமுதம் இன்னும் எழுமெனும் ஆசையால்; ;

இந்த செய்யுளின் விளக்கம் என்னவென்றால் குமுதன் என்னும் படைத்தலைவன் பூமியிலிருந்து மரங்களை வேரோடு பிடுங்கி அந்தரத்தில் பந்தாடிக் கொண்டு வந்து மற்றவர்களைப்போல தெய்வ தச்சன் ஆகிய நளன் என்பவனின் கையில் கொடுக்காமல் தானே விட்டு எறிந்ததால் பிரமாண்டமான மலையானது கடலில் வந்து விழுந்து கூத்தாடிகள் போல திமிதமென்று ஒலித்து சுழல்வதால் நுரைத்து திரைத்து குமிழியிட்டு எழுந்த கடல் நீர் துளிகள் விசையாய் வந்து தங்கள் இருப்பிடமாகிய சுவர்க்கத்தில் பிரவேசித்ததை அங்குள்ள தேவர்கள் பார்த்து பூர்வ காலத்தில் தேவர்களும் ஸ்ரீமகாவிஷ்ணுவும் கூடி ஒரு மலையை மாத்திரம் கொண்டு போய் போட்டு அமுதம் எழும்படி பாற்கடலை கடைந்தார்கள். இப்பொழுது அந்த விஷ்ணுவே ஸ்ரீராமனாக அவதரித்தும் தேவர்களே வானரங்களாக பிறந்து வந்தும் அனேக மலைகளைப் பிடுங்கி இந்த தென் சமுத்திரத்தில் போடுகிறார்கள். இனி இதையும் கடைவார்கள். அப்படிக் கடையும்போது முன்பு போலசொற்பமாக இல்லாமல் ஏராளமான அமுதம் உண்டாகும். நாமும் ஆசை தீருமட்டும் அருந்தலாம் என்று ஆசைப்பட்டு மகிழ்ச்சியுடன் சொன்னார்கள். இப்படி அந்த செய்யுள் கூறுகிறது.

 இதைக்கேட்ட ஒட்டக்கூத்தர் கம்பரை நோக்கி துளியைத் துமி என்கிறீர்களே. இது ஏதும் இலக்கிய பிரயோகமா? என்று கேட்டார். அதற்கு கம்பர் அப்படி ஒன்றும் இல்லை. உலகவழக்குதான்; என்று கூறினார். கம்பரின் அந்த விளக்கத்தில் ஒட்டக்கூத்தர் திருப்தி அடையவில்லை. கம்பர் கண்டபடி எதிர்வு கூறிவிட்டு அதனை உலகவழக்கு எனக் கூறி சமாளிக்கப் பார்க்கிறார். இதனை விடக் கூடாது என்று தீர்மானித்தபடி உலக வழக்கு என்பது உண்மையானால் அதனை தங்களால் மெய்ப்பிக்க முடியுமா? என்று கேட்டார். கம்பர் அதற்கு நல்லது மெய்ப்பிக்கிறேன்; என்று கூறினார்.

 பிரசங்கம் முடிந்த பின்னர் வீட்டுக்கு வந்து அன்னை சரஸ்வதியை வழிபட்டார் கம்பர். அம்மா தாயே பிரம்மாதி தேவர்களும் மகரிஷிகளும் பிரார்த்திக்கும்வகையில் அவர்கள் நாவினில் வீற்றிருக்கும் நீ எளியவனான என் நாவிலும் அருளியபடி நான் பாடிய துமி என்ற சொல்லை ஒட்டக்கூத்தர் ஆட்சேபித்து மெய்ப்பிக்கும்படி போராடுகிறார். அவரிடமிருந்து நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்; என்று வணங்கினார்.

மறுநாள் மாலைநேரம். ஒட்டக்கூத்தரையும் கம்பரையும் அழைத்துக்கொண்டு குலோத்துங்க மன்னர் உலாவச் சென்று கொண்டிருந்தார்.  அவர்கள் அப்படி உலாவச் செல்வது வழக்கம். அவ்வாறு நடந்து செல்கையில் ஒரு வீட்டில் இடை பெண்ணொருத்தி பிள்ளைகள் சுற்றியிருக்க தயிர் கடைந்து கொண்டு இருந்தாள். கம்பர் ஒட்டக்கூத்தர் மன்னர் மூவரும் அந்த வீட்டைக் கடந்து செல்கையில் இடைப் பெண்ணான அவள் அந்தப் பிள்ளைகளைப் பார்த்து பிள்ளைகளே, உங்கள் மீது மோர்த்துமி தெறிக்கப்போகிறது. சற்றுத் தள்ளி இருங்கள் என்று கூறினார். அதைக் கேட்ட கம்பர் ஒட்டக்கூத்தரைப் பார்த்து என்ன கேட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு ஒட்டக்கூத்தரும் சரிதான்;; என்று ஒப்புக் கொண்டு அந்த வீட்டை கடந்து செல்கையில் இந்த வீடு குடி இல்லாத பாழடைந்த வீடு அல்லவா. இப்பொழுது யார் இங்கே இருக்கிறார்கள் என்று அறிய வேண்டும் என நினைத்துக் கொண்டு மெதுவாக பின்னால் திரும்பிப் போய் அந்த வீட்டை நோட்டமிட்டார். அப்பொழுது அங்கு இருந்த இடைப் பெண்ணும் பிள்ளைகளும் தயிர் கடையும் பொருட்களும் அவர் கண்ணில் தோன்றி மறைவதைக் கண்டார். இது அன்னை சரஸ்வதி கடாட்சம் என்று அவருக்குப் புரிந்தது.

 இது நடந்து சுமார் ஆறு மாத காலத்திற்குள் கடல் காண் படலத்தை செய்யுள்களாக ஒட்டக்கூத்தர் பாடினார். ஆனாலும் அவர் மனதில் ஒரு குறை இருந்தது. கம்பருக்கு அன்னை சரஸ்வதியின் அருட்கடாட்சம் இருக்கிறது. அதனால் அவருடைய கவிதை முன் நம்முடைய கவிதை எடுபடாது என்று வெறுப்படைந்து ஒருநாள் தாம் பாடிய இராமாயணச் செய்யுள்களை ஒவ்வொன்றாக உருவி கிழித்து எறிந்து கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு தேவைக்காக அங்கு சென்ற கம்பர் ஒட்டக்கூத்தரைப் பார்த்து என்ன எறிகிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு ஒட்டக்கூத்தர் ;நான் பாடிய இராமாயணம்; ;என்று கூறினார். உடனே கம்பர்; ;அடடா பாடுபட்டுப் பாடியதை ஏன் எறிகிறீர்கள்;?; ;  என்று கேட்டார். அதற்கு ஒட்டக்கூத்தர் வரகவியே கவி. மற்றைய கவி என்ன கவி? என்று கூறுகையில் கம்பர் அந்த ஏடுகளையெல்லாம் பறித்து எடுத்து அவை உத்தர காண்டம் என்று அறிந்து கொண்டு இதனை நான் பாடத்தேவை இல்லை என்று நினைத்தபடி ஒட்டக்கூத்தரைப்பார்த்து  ;ஐயா அருமையாக பாடியதை ஏன் வீணாகக் கிழித்தெறிய வேண்டும். நான் ஆறு காண்டம் பாடி அதன்பின்னர் நீர் பாடிய ஏழாவது காண்டமான இந்த இரண்டாயிரம் பாடல்களையும் சேர்த்துக் கொள்கிறேன்; ; என்று கூறினார். ஒட்டக்கூத்தரும் அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.

இவ்விதமாக கம்பர் பாடிய ஆறு காண்டங்களையும் ஒட்டக்கூத்தர் பாடிய உத்தரகாண்டத்தில் சேர்த்து இராமாயணத்தை பாடி முடித்தார்.

இப்படித்தான் கம்பராமாயணம் என்னும்  அரிய பொக்கிஷம் உருவானது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X