2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் கோவில் கொடியேற்றம்

Johnsan Bastiampillai   / 2022 மார்ச் 08 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

திருமதி. வானுபிரியா சசிகரன்

 

 

 

‘தெட்ஷணகைலாசம்’ என்னும் திருக்கோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோவில் பிரமோற்ஸவம், இன்று (08)  செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு, கொடியேற்றத்துடன் நிகழத் திருவருள் கூடியுள்ளது.

அதைத் தொடர்ந்து ஒன்பது நாள்கள் திருவிழா இடம்பெற்று 10ஆம் நாள் 17.03.2022 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு இரதோற்சவத் திருவிழாவும் 18.03.2022 (பங்குனி உத்தரம்)  வெள்ளிக்கிழமை உதயத்தில் தீர்த்தோற்ஸவமும் இரவு கொடியிறக்கமும் இடம்பெறும். மறுநாள் 19.03.2022 அன்று சனிக்கிழமை பூங்காவனத் திருவிழாவும் இடம்பெறும்.

மஹோற்சவ காலங்களில் தினமும்
காலை 5.30 மணிக்கு அபிஷேகம்,
 காலை 7.00 மணிக்கு மூலஸ்தான பூஜை,
7.45 க்கு தம்ப பூஜை,
8.30 மணிக்கு வசந்த மண்டப பூஜை,
 பிற்பகல் 2.30 மணிக்கு அபிஷேகம்,
3.30 மணிக்கு மூலஸ்தான பூஜை,
மாலை 4.15 க்கு தம்ப பூஜை,
மாலை 5.00 மணிக்கு வசந்த மண்டப பூஜை
6.00 மணிக்கு அம்பாள் வீதியுலா  இடம்பெறும்.

அம்பாளுடைய கோவிலின் உள்ளும் புறமும் எப்போதும் புனிதமாகவே இருக்கும். கோவில் தர்மகர்த்தாவாகிய வேதாகமமாமணி பிரம்மஸ்ரீ சோ. இரவிச்சந்திர குருக்களுக்கும் வழிபடும் அடியார்களுக்கும் பக்தி விஸ்வாசத்தோடு கூடிய அன்புத் தொடர்பு இருந்து வருகின்றது. இது பத்திரகாளி அம்பாளின் அருட்செயலன்றே கூறலாம்.
இவ்வாலயத்தின் வரலாறுகளை திட்ட வட்டமாக வரையறுத்துக் கூறமுடியவில்லையென்றாலும் இவ்வாலயத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், பழைய சாசனங்கள், கர்ண பரம்பரையாக வழங்கி வரும் கதைகள், அக்கதைகளோடு தொடர்புடையதாய் தற்போது கோவில் இருக்கும் விக்கிரகம், தகளி, வாகனம், பொருட்கள் ஆகியவற்றை ஆதாரமாக கொண்டு, முதலாம் இராஜேந்திர சோழனுடைய பதினோராம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்று இருக்க வேண்டுமென்று, சரித்திர பேராசிரியர் செ.குணசிங்கம் குறிப்பிட்டுள்ளார். இதனால், இவ்வாலயம் அதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழிப்பாட்டுக்குரிய ஸ்தலமாக இருந்து வந்துள்ளதென்பதைத் துணிந்து கூறலாம்.

தற்போது இவ்வாலயம் இருக்குமிடத்தில், பன்னெடுங்காலத்துக்கு முன்பு நிலத்தை அகழ்ந்த போது, ஒரு தகளி கிடைத்ததாகவும் அதற்குள்ளே அம்பாளின் திருவுருவம் தாமிர விக்கிரகம் இருந்ததாகவும் கூறுகின்றார்கள். அந்தத் திருவுருவம் இப்போதும் ஆலயத்தில் இருக்கின்றது. சில விசேட உற்சவங்களுக்கு இந்த அம்பாளை எழுந்தருளச் செய்வார்கள்.

சிங்க வாகனம் ஒன்றை இந்தியாவிலிருந்து கப்பலில் ஏற்றிக் கொண்டு, இந்து சமுத்திரத்தில் சென்று கொண்டிருந்ததாகவும் ஸ்ரீ பத்திரகாளியம்பாள் கோவிலுக்கு நேராகக் இக்கப்பல் ஓடாமல் நின்று விட்டதாகவும் அம்பிகையின் அருளால் கப்பல் தலைவன் கண்ட சொற்பனத்தின்படி, அந்தச் சிங்க வாகனத்தை இவ் ஆலயத்தில் சேர்த்த பின்னரே, கப்பல் ஓடத் தொடங்கியதென்றும் கர்ண பரம்பரைக் கதையொன்று கூறுகின்றது. அந்தச் சிங்க வாகனமும் கோவிலில் இருக்கின்றது. மேலே குறிப்பிட்ட கல்வெட்டும் ஆலயத்தில் இருக்கின்றது.

பிரம்மஸ்ரீ சு.கு.சோமாஸ்கந்தக் குருக்கள், தமது தந்தையார் இயற்கை எய்தியதையடுத்து 16 வயதில் இவ்வாலயத்தின் பூசைப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார். இவர் பொறுப்பேற்கும் பொழுது, கர்பக்கிரகமும் மண்டபங்களும் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தன. 1933ஆம் ஆண்டு அம்பாளின் ஆலயத் திருப்பணி வேலைகள் சிலவற்றை செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அக்காலத்தில் சகடையில் கம்புத் தடிகளால் தேர் போலக் கட்டி இரதோற்சவம் செய்யப்பட்டு வந்தது. இந்தக் கும்பாபிஷேகத்தின் பின்னர் ஒரு புதிய தேருக்கு கீழண்டம் மாத்திரம் செய்து, கட்டுத்தேரை இரதோற்சவத்திற்குப் பயன்படுத்தி வந்தார்கள். 1947இல் மகாமண்டபம், கோபுர மண்டபங்களை சிறப்பாகத் திருத்தியமைத்து இரண்டாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது.

1962ஆம் ஆண்டில் வசந்த மண்டபத்தையும் சில திருத்த வேலைகளையும் செய்து முடிக்கப்பட்டு, மூன்றாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது.

1979ஆம் ஆண்டு கற்பக்கிரக விமானத்தை பூரணமாகத் திருத்தி அமைத்து, அதில் சுதைச் சித்திரங்களாக சப்த கன்னியர்கள் அமைக்கப்பட்டன. அர்த்த மண்டபத்தின் தென் புறத்தில் முச்சக்திகளும் வடபுறத்தில் அம்பாள், விநாயகர், முருகனும் அமைக்கப்பட்டன. மகா மண்டபத்தின் சானக் கிராமத்தில் ராஜராஜேஸ்வரியின் திருவுருவமும் விமானத்தில் கௌரியம்மாளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்நபன மண்டபம் சிற்ப சித்திர வேலைபாடுகளோடு மிகச் சிறப்பாக பூரணமாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது. மேற்‌றளத்தில் அட்டநாக பந்தனம், ராசிச்சக்கரம் என்பன அமைக்கப்பட்டிருக்கின்றன. அம்மண்டபத்தின் தெற்கு பக்கம் மகாலெட்சுமியையும் வடக்குப் பக்கம் சரஸ்வதியையும் பரிவார மூர்த்திகளாக வைக்கும் ஆலயம் அமைக்கப்பட்டு திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிம்மம், பலிபீடம், கொடிதம்பம், மூலாதார கணபதி என்பனவும் நாகதம்பிரான், பைரவர் ஆலயங்களும் பூரணமாகத் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. வெளி மண்டபத்தோடுள்ள சானக் கிராமத்தில் பத்திரகாளியம்பாளின் திருவுருவம் கதையினால் சித்தரிக்கப்படுகின்றது.

மண்டப வாசலுக்கருகே மணிக் கூட்டுக் கோபுரத்தை 40 அடி உயரத்திற்கு உயர்த்திக்  கட்டி 600 இறாத்தல் எடையுள்ள காண்டாமணி புதிதாக ஏற்றப்பட்டிருக்கின்றது.  மேலே கூறப்பட்ட திருப்பணிகளைச் சிறப்பாகச் செய்து, 06.02.1980ஆம் ஆண்டு சம்புரோட்சண கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது.

1972ஆம் ஆண்டு சித்திரத் தேர் மூன்றும் மஞ்சமும் செய்யப்பட்டு இரதோற்சவத்திற்கு பயன்பட்டு வருகின்றது. கிழக்கிலங்கையில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட சித்திரத் தேர் இதுவாகும்.

கருவறையில் சதுர்ப்புஜங்களையுடைய அம்பாளின் சிலா விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. சூலம், டமருகம்,கட்கம், கபாலம் தாங்கிய திருக்கரங்களோடு அம்பாள் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றார். மகா மண்டபத்தில் ஸ்ரீபத்திரகாளியம்பாள், ராஜராஜேஸ்வரி, முருகன், தாளியில் கிடைத்த அம்பாள், சண்டேஸ்வரி என்னும் தாமிர விக்கிரகங்களும் அர்த்த மண்டபத்தில் பிள்ளையாரும், வடக்குப் பக்கம் தண்டாயுதபாணியின் சிலா விக்கிரகங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாலயத்தில் உச்சிக்காலம், சாயரட்டை ஆகிய இரண்டு காலங்களிலும் நித்திய பூசை நடைபெற்று வருகின்றது.

திருகோணமலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபத்திரகாளியம்பாளுக்கும் பாலம்போட்டாறு பத்தினியம்மனுக்கும் சல்லியம்மனுக்கும் பண்டுதொட்டு தொடர்பு இருந்து வருகின்றது. வைகாசிப் பூரணை வரும் தினம் எதுவோ அதற்கு முன்னே வரும் திங்கட்கிழமை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் கோவிலில் பொங்கலும் இத்தினத்திற்கு முன்னர் வரும் திங்கட்கிழமை பாலம்போட்டாறு பத்தினியம்மன் கோவிற் பொங்கலும் இத்தினத்தை அடுத்து வரும் வாரத்தில் செவ்வாய்க்கிழமை சல்லியம்மன் கோவில் பொங்கலும் நடைபெற்று வருகின்றன. இதனால் வைகாசி மாதம் முழுவதும் திருகோணமலையில் சக்தி வழிபாடு பக்தி வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் காணலாம்.

திருகோணமலையில் நடைபெறுகின்ற கும்ப விழாவைப் போன்று வேறு எங்கும் நடைபெறுவதில்லை.விஜயதசமியன்று பரவலாக எல்லா ஆலயங்களிலும் கும்பவிழா நடைபெற்று வருகின்றது. எல்லா ஆலயங்களிலிருந்தும் கும்ப கரகங்கள் தத்தம் கோஷ்டிகளுடன் ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வந்து தரிசிப்பார்கள்.

இவைகளைப் பார்ப்பதற்காக இவ்வாலயத்தில் மக்கள் திரளாகக் கூடி நிற்பார்கள்.
அன்று இவ்வாலயத்தில் ‘மானம்பு’ திருவிழாவும் நடைபெறும். அம்பாள் ஆலயத்திற்கு எதிரேயுள்ள மைதானத்தில் மானம்புத் திருவுலாவுக்காக எழுந்தருளுவார். அவ்விடத்தில் கோணேசர் கோவிலிலிருந்து மாதுமையம்பாளும் சிவன் கோயிலிலிருந்து விசாலாட்சியம்பாளும் வந்து மானம்பு விழா நடத்திச் செல்வர். இதுவும் இந்துக்களுக்கு ஒரு வாய்ப்பான சமய நிகழ்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

புரட்டாதி மாத விஜயதசமியன்று இவ்விரதம் ஆரம்பிக்கப்பட்டு ஐப்பசி மாத அமாவாசைத் திதியில் இவ்விரதம் நிறைவு பெறுகிறது. இருபத்தொரு நாள்களுக்கு அனுஷ்டிக்கப்படும் இவ்விரதம் திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் கடந்த 150 வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இவ்விரதத்தை அனுஸ்டிக்க ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு வந்து கூடுவார்கள். அம்பிகையின் அற்புதமான அருட் பலத்தால் வருடாவருடம் இவ்விரதத்தை அனுஸ்டிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் அனைவரும் இவ்விரதத்தை அனுஸ்டிக்கலாம். ஆதலால் ஒவ்வொரு வருடமும் ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் இவ் ஆலயத்தில் வந்திருந்து இவ்விரதத்தை அனுஸ்டிப்பார்கள்.

பண்டைக்காலம் தொடக்கம் இன்று வரை ஸ்ரீபத்திரகாளி அம்பாளின் திருவருளால் இவ்வாலயத்தில் பல அற்புதங்கள் நடைபெற்று வந்துள்ளன. இவற்றினால் மக்களிடம் பயபக்தி வளர்ந்து கொண்டு வருகின்றது. இதனால் பக்தியோடு வழிபடும் அடியார்கள், அம்பிகையின் கிருபாகடாட்சத்தால் எண்ணியன எண்ணியாங்கெய்தி இன்புற்று வாழ்கின்றார்கள்.

பிரம்மஸ்ரீ க.கு.சோமஸ்கந்த குருக்களின் பின் அவரது ஏக புதல்வன் வேதாகமமாமணி பிரம்மஸ்ரீ சோ.ரவிச்சந்திரக் குருக்கள் ஆலய பரிபாலனத்தை சிறந்த முறையில் மேற்கொண்டு வருகிறார். ஆலயத்தில் பல திருப்பணிகளை இவர் நிறைவேற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்திருப்பணிகளில் உச்சமாய் அமைந்திருப்பது 66 அடி உயர நூதன லய சப்த தள இராஜகோபுர மகா கும்பாபிஷேகமாகும். இது விக்ரம வருடம் 2001ஆம் ஆண்டு தை மாதம் 25ம் நாள் புதன் கிழமை தைப்பூசத் திருநாளன்று நடைபெற்றது.

இவ் ஆலயத்தில் கிழக்கிலங்கையில் 1992ல் முதல் முறையாக மூன்று சித்திரத் உட்பட மஞ்சம், பெரும் திருப்பணியாக நிறைவேறியது. இவ் ஆலயத்தில் கிரியைகள், பூஜைகள், திருவிழாக்கள் நேரந்தவறாமல் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .