2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மனின் மாசிமக பஞ்ச இரத பவனி

Editorial   / 2023 மார்ச் 06 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எச். எச். விக்ரமசிங்க

'உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா

உன்பாதம் சரண்புகுந்தேன் - எங்கள் முத்துமாரியம்மா'

என்று மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மையின் பெருமையைப் பாட்டில் இசைக்கிறார், மகாகவி பாரதியார்.

காசி என்றதும் விசாலாட்சியும், காஞ்சி என்றதும் காமாட்சியும், மதுரை என்றதும் மீனாட்சியும் நினைவில் எழுவது போல் மாத்தளை என்றதும் முத்துமாரியம்மைதான் நினைவில் வருகிறார். அருளாட்சி நடத்தும் அன்னையாக நர்த்தன சுந்தரியாக – சிறுமை கண்டு பொங்கும் தேவியாக - மகிஷ்சுர மர்த்தனியாக – கொடுமையைக் கருவறுக்கும் காளியாக - பசிப்பிணி போக்கும் அன்னபூரணியாக, - அரனுடன் கலந்த அர்த்தநாரியாகத் திருக்கோலம் காட்டும் அன்னை முத்துமாரியாக மாத்தளையிலே குடிகொண்டமை நாம் பெற்ற பேறு என்றே கூற வேண்டும்.

இன்று சக்தியின் பிரதான வழிபாட்டு மூர்த்தமாக விளங்குவது மாரியம்மன் திருக்கோலமாகும். மத்தியமலை நாட்டில் ஆங்கிலேயர் காலத்தில் பெருந்தோட்ட பயிர்ச் செய்கைக்காக  அழைத்துவரப்பட்ட மக்களின் வருகையோடு மாரியம்மன் வழிபாடு, கிராமிய தெய்வ வழிப்பாட்டு முறையில் தொடர்ந்து இன்று சிவாகம நெறியில் தழைத்தோங்கியுள்ளது. மாரியம்மன் வழிபாட்டுடன் வளர்ச்சி பெற்று வருவது மலையகத்தில் மாரியம்மன் கலாசாரமாகும்.

இலங்கையில் சைவம் வளர்த்த, சான்றோர்களும், தமிழ் வளர்த்த செம்மல்களும் ஈஸ்வரனை மறவாது நூல்கள் எழுதியுள்ளனர். சிவனை மறந்து செய்யும் தர்மங்கள் வீண் செயல்கள் என்பதை நமது முன்னோர்கள் உறுதியாக நம்பினர். அந்தப் பாரம்பரியம் என்பது அழியாது வேரோடி வந்துள்ளது. அண்மையில் எங்கள் மத்தியில் ஒளிவிளக்காகத் திகழ்ந்த வணக்கத்துக்குரிய யோகர் சுவாமிகளும் 'ஈழம் சிவப்பொழிவு பெற்ற நாடென| பதிவுசெய்துள்ளார். 

ஈழத்தில் நாவலர் பெருமான் ஆற்றிய சைவத் திருப்பணிகளை, அண்மையில் நான் காசிக்கு விஜயம் செய்த போது, அங்கு வாழும் சைவ பிரகாச வித்தியாசாலை மாணவ பரம்பரையினர் இளைய தலைமுறையினர் எடுத்தியம்பிய போது புளங்காகிதம் அடைந்தேன். மலையக மக்களின் முதல் வரலாற்று சாசனம் மாத்தளை ஆகும். மாத்தளை ஸ்ரீ அன்னை முத்துமாரி மலையக மக்களின் இதய தெய்வம். மாத்தளை என்றால் மாசிமகம். அன்னை முத்துமாரி திருக்கோயில் பஞ்ச இரத பவனி என்பனவையாகும்.  மாத்தளையில் மாசிமக மகோற்சவமும் பஞ்ச இரத பவனியும் வெகு பக்திபிரவாகமாக பல்லாண்டு காலமாக  விமரிசையாக நடைபெற்று வருவது அம்மாளின் அனுக்கிரகமேயாகும்.

மாசிமகமும் பஞ்ச இரத பவனியும் சிறப்பாக நடைபெற அயராது உழைக்கும் ஆலய பரிபாலன சபை தலைவர் சேதுராமன் சர்வானந்த தலைமையிலான பரிபாலன சபையினர் உட்பட அனைத்து தொண்டர்களுக்கும் அடியார்களுக்கும் அம்பாளின் அருளாசி பெற வேண்டி துதிக்கின்றோம்.

தன் எழுத்தின் வளத்தால் நன்கறியப்பட்டவரும், இன்று கடல் கடந்த நாடுகளிலும் கௌரவம் பெற்ற  இலக்கிய கருத்தா மாத்தளை பெ. வடிவேலன் எழுதிய 'மலையகம் - 200| இலங்கை இந்திய வம்சாவளி தமிழ் வரலாற்றில் முதல் சாசனம் மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்| என்னும் நூல் வெளிவந்துள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க பணியாகும்.

மலையகத்தில் மாரியம்மன் வழிப்பாடும் வரலாறும், மலையக நாட்டுப்புறவியலில் மாரியம்மன், முத்து மாரியம்மன் கலாசாரம் உட்பட சுமார் பல நூல்களைப் படைத்துள்ள வடிவேலனின் இப்புனித பணி மேலும் தொடர மாத்தளை அன்னை முத்துமாரி அருள்பாலிப்பாராக.

மலையகத்திலுள்ள ஆலயங்களின் வரலாறு பற்றி இதுவரை ஆய்வுபூர்வமான நூல்கள் வெளிவரவில்லை. வரலாற்றுத் துறையில் ஆழ்ந்த புலமை கொண்ட பேராசிரியர்களின் வழிக்காட்டலில் மலையக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுக் கூடி இப்பணியினை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாய கடமையாகும்.

உலகெங்கும் அம்மனின் புகழ் ஓங்குக!
அனைவருக்கும் அம்பாளின் அருளாசி கிட்டுவதாக.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .