2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

காரைநகரில் அடாவடி: பண்ணையாளர்கள் போராட்டம்

Mayu   / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்நடை வளர்ப்போர் மீது திணிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் அபராதங்களினால் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்குத் தீர்வு கோரி, காரைநகர் கால்நடை வளர்ப்போர் சுயாதீனக் குழுவினர் இன்று (21) அடையாளப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று முற்பகல் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது, பண்ணையாளர்கள் தமது குமுறல்களை வெளிப்படுத்தினர்.

பண்ணையாளர்களின் முக்கிய குற்றச்சாட்டுகள்:
ஒடுக்குமுறை: விவசாயிகளுக்குத் தாம் எதிரானவர்கள் அல்ல என்றும், ஆனால் கமநல சேவைத் திணைக்களம், கமநலக் குழு மற்றும் பிரதேச சபை என்பன கால்நடை வளர்ப்போர் மீது ஒடுக்குமுறைகளைப் பிரயோகிப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.

மேய்ச்சல் அனுமதி மறுப்பு: 2025ஆம் ஆண்டு காலபோக நெற்செய்கைக்காகக் கட்டப்பட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. ஒரு சில விவசாயிகளின் சிறுதானியச் செய்கையைக் காரணம் காட்டி, வருடம் முழுவதும் கால்நடைகளைக் கட்டி வைப்பது சாத்தியமற்றது என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தண்டப்பணம் மற்றும் சித்திரவதை: பயிர்ச் செய்கை இல்லாத இடங்களிலும், கடற்கரையோரங்களிலும் மேயும் கால்நடைகளைக் கைப்பற்றி, பெருந்தொகைப் பணம் தண்டப்பணமாக அறவிடப்படுகிறது. கால்நடைகளைப் பிடிக்கும்போது அவை காட்டுமிராண்டித்தனமாகச் சித்திரவதை செய்யப்படுவதாகவும், பராமரிப்பு என்ற பெயரில் அவை நோய்வாய்ப்படுத்தப்படுவதாகவும் கவலை தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:
பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாத இடங்களில் மேயும் கால்நடைகளைப் பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

பிடிபடும் கால்நடைகளுக்கான தண்டப் பணத்தைக் குறைக்க வேண்டும்.

கோடை காலத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை மற்றும் குடிநீர் வசதிகளை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

கால்நடைகளைக் கட்டி வளர்க்கும் காலப்பகுதியில், மானிய அடிப்படையில் தீவனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

15.04.2026 முதல் கால்நடைகளை வருடம் முழுவதும் கட்டி வளர்க்க வேண்டும் எனப் பிரதேச சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையை மீளப் பெற வேண்டும்.

பிடிபடும் கால்நடைகளை ஏலத்தில் விற்பனை செய்வதைத் தவிர்த்து, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வழிவகை செய்ய வேண்டும்.

கால்நடை வளர்ப்போர் ஏழைகளாக இருப்பதினால், தண்டப்பணத்தைச் செலுத்துவதற்காகத் தமது வாழ்வாதாரமான கால்நடைகளையே விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாகவும், இது காரைநகரில் கால்நடை வளர்ப்பையே அழிக்கும் செயல் எனவும் அவர்கள் இதன்போது எச்சரித்தனர்.

நிதர்ஷன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .