2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'அனைத்து இன மக்களுக்கும் தலைநிமிர்ந்து நிற்கக்கூடியதாக வழி பிறந்துள்ளது'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, அஸ்லம் எஸ்.மௌலானா

முப்பது வருடகால யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தற்போது இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் ஒரே நாடு, ஒரே தேசம் என்று தலைநிமிர்ந்து நிற்கக்கூடியதாக வழி பிறந்துள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இந்த நாட்டில் நிலவிவந்த அரசியல் குரோதத்தை  இல்லாமல் செய்து, அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து செயற்படுத்திவரும் ஜனாதிபதியினதும் பிரதமரினதும்; முன்மாதிரியான செயற்பாட்டைப்  போன்று, நாட்டிலுள்ள அனைத்து இனங்களையும் ஒற்றுமைப்படுத்துவதற்கான ஆயுதத்தை மக்கள் கையில் எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கல்முனை, சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் 375 மில்லியன் ரூபாய் நிதியில் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, அங்கு ஞாயிற்றுக்கிழமை (09) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இனவாதத்துக்கு நாம் ஒருபோதும் துணை போகக்கூடாது. நாட்டை ஒற்றுமைப்படுத்தி, அபிவிருத்தி செய்வோர் எவராக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும்' என்றார்.

'இந்த நாட்டில் மொழி, கலாசாரம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளன. பல்லினச் சமூகங்கள் வாழ்ந்துவரும் உலகின் அனைத்து நாடுகளிலும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன. இவற்றை சுமூகமாகத் தீர்க்க முடியும்.

தற்போது நல்லாட்சியில்; அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து இன மக்களும் இலங்கையர் என்ற ரீதியில் ஒற்றுமைப்பட வேண்டும். அப்போதே நிரந்தரமான சமாதானச் சூழலைக் கட்டியெழுப்ப முடியும் என்பதுடன், நாடும் நாட்டு மக்களும் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும்' என்றார்.

'விளையாட்டின் ஊடாக சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியுள்ளது. அந்த வகையில், தேசிய அணிகளில் எந்த அணியாக இருந்தாலும், அதில் இன, மத, அரசியல், பிரதேச வேறுபாடுகள் காணாது திறமைக்கு முன்னுரிமை வழங்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X