2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'இன ஐக்கியத்தை வளர்ப்பதற்கு தரமுள்ள கல்வி உதவும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

ஒரே மொழியைப் பேசுகின்ற தமிழ்,முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் தமக்கிடையே நிலவி வருகின்ற சந்தேகங்களை களைந்து இன ஐக்கியத்தை வளர்ப்பதற்கு தரமுள்ள கல்வி உதவும் என கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் வலியுறுத்தியுள்ளார்.

கல்முனையில் நேற்று (10) இரவு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்லூரி அதிபர் திரேஸ் ராணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் பேசுகையில்,

வெறுமனே பட்டதாரிகளை மட்டும் உருவாக்குவது சிறந்த கல்வித் திட்டமாக இருக்க முடியாது. நிச்சயமாக தரமுள்ள கல்வியின் மூலமே நாட்டுக்கும் சமூகத்துக்கும் பயனுள்ள நற்பிரஜைகளை உருவாக்க முடியும். இதன் மூலமே நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்ட ஒழுக்க நெறியுள்ள சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்ப முடியும்.

நமது பாடசாலைகள் நிறைய வைத்தியர்களையும் பொறியியலாளர்களையும் மற்றும் பட்டதாரிகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்று நாம் திருப்தி கொள்வோமாயின், அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்பதுதான் அர்த்தமாகும். இது விடயத்தில் கல்விச் சமூகம் மாத்திரமல்லாமல் பெற்றோரும் விழிப்படைய வேண்டும்.   

குறிப்பாக முன்பள்ளிப் பாடசாலைகள் இத்தகைய பின்னணியில் அமைய வேண்டியது அவசியமாகும். நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக வரப்போகின்ற இன்றைய சிறார்களுக்கு தரமுள்ள கல்வி ஊட்டப்படுவதன் மூலமே அவர்களை சிறந்த பிரஜைகளாக வளர்த்தெடுக்க முடியும். ஐக்கிய நாடுகள் சபை கூட தனது 17 வகையான கொள்கைத் திட்டங்களில் இதனை வலியுறுத்துகின்றது என்றார்.

இந்நிகழ்வில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் அமீரா லியாகத் அலி, வெஸ்லி உயர்தரக் கல்லூரி அதிபர் எம்.பிரபாகரன், சட்டத்தரணி லியாகத் அலி உட்பட மற்றும் பலர் பங்கேற்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X