2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமையே ஆட்சி மாற்றத்துக்குப் பிரதான காரணம்'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 03 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, றியாஸ் ஆதம்

சிறுபான்மையின மக்களின் உணர்வுகளுக்கு கடந்த அரசாங்கம் மதிப்பளிக்காத காரணத்தாலேயே நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்குப் பிரதான காரணமாக அமைந்தது என கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

மாணிக்கமடு, மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பான கலந்துரையாடல், அம்பாறை மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் துஷித்த பி.வணிசிங்கவின் தலைமையில் புதன்கிழமை (02) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சியிலும் சிறுபான்மையின மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், பல நிகழ்வுகள் தொடர்கின்றன.

அரசியலில் இனவாத நடவடிக்கைகளுக்கு ஊக்கம் ஊட்டுபவர்களாக நாம் ஒருபோதும் செயற்பட்டதில்லை. நாம் அனைவரும்; சகோதர உணர்வுடன் வாழ்ந்து, கிழக்கு மாகாணத்தில் முன்மாதிரியான மாவட்டமாக அம்பாறை மாவட்டத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட வேண்டும்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சிக்கான இடங்களை முஸ்லிம்களும் தமிழர்களும் பாதுகாத்து வந்துள்ளனர். புதிய அரசாங்கத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட்டு, சுபீட்சமாக வாழக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.

இந்நிலையில், நல்லாட்சியில் சிறுபான்மையின மக்கள் நம்பிக்கை வைத்துள்ள இக்காலகட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுடன் எந்தவிதமான கலந்துரையாடலும் மேற்கொள்ளாது, திடீரென மாணிக்கமடு, மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைத்துள்ளதால், இப்பிரதேசத்தில் இன ஒற்றுமையுடன் வாழ்ந்துவந்த சமூகங்கள் மத்தியில் அச்சத்தையும் சந்தேகத்தையும் இச்சூழ்நிலை உருவாக்கியுள்ளது' என்றார்.

'எமது நாட்டில் பெரும்பான்மையின  மக்களுக்கான விகாரையை நிர்மாணிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்லர். ஆனால் முஸ்லிம், தமிழ் மக்கள் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் திடீரென பௌத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கும் நடவடிக்கையால் நல்லாட்சிக்கு அபகீர்த்தி ஏற்படுவதுடன், இம்மாவட்டத்தில் ஒற்றுமையாக வாழ்கின்ற மூவினச் சமூகங்களுக்கு இடையிலான உறவும் சீர்குலையும் நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த விவகாரம் தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டு, சமூகங்கள் மத்தியில் இன உறவை வளர்த்தெடுத்து இனங்களுக்கு இடையில் பிரச்சினை தோன்றாத வகையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்' எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .