2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'ஒலுவில் துறைமுகத்தை அண்டி கைத்தொழில்பேட்டை அமைக்க ஏற்பாடு'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

ஒலுவில் துறைமுகத்தை அண்டி பாரிய கைத்தொழில்பேட்டையை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல்  அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சும் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகமும் இணைந்து நடத்திய நடமாடும் சேவை நேற்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'ஒலுவில் துறைமுக நிர்மாணிப்பினால் அப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடல் அரிப்பினைத் தடுப்பதற்கு துறைமுக அதிகார சபையின் நிபுணர்கள் குழு அங்கு விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாரவில பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பை தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கடலரிப்பு தடுக்கப்பட்டுள்ளதோ அதே போல் ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பையும் தடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்' என்றார்.

'ஒலுவில் துறைமுகம் இப்பிராந்தியத்தின் பொருளாதார மையமாக வளர்ச்சியடைவதற்கு வழிவகைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

கிழக்கு மாகாணம் நகர திட்டமிடல் அமைச்சினாலும் மாகாண சபையினாலும் பாரிய அளவிலான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அம்பாறை மாவட்டம் அபிவிருத்தி திட்டங்களை கண்டு வருவதோடு எதிர்காலத்தில் அட்டாளைச்சேனை நகரம், நகர அபிவிருத்தி அமைச்சினூடாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை காணிப் பிரச்சினைகள் அதிகமாக காணப்படுகின்றன. இவை தொடர்பாக மாவட்ட மட்டத்தில் மத்திய அரசு, மாகாண காணி ஆணையாளர் என்பன இணைந்து தனியான நடமாடும் சேவை ஒன்றை ஏற்படுத்தி அதனூடாக இம்மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிவரும் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சம காலத்தில் அரசாங்கத்தினால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம், நல்லிணக்கச் செயற்பாடு, காணாமல் போனவர்களுக்கான செயலகம் காணாமல் போனவர்களை பரிசீலித்து அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து அவர்களுக்கான நட்டஈட்டை பெற்றுக்கொடுப்பதற்கு முனைப்போடு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுகின்றது.

அபிவிருத்தியுடன் இணைந்ததாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தின் உரிமைகளையும் சலுவைகளையும் பெற்றுக்கொள்வதற்கு நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X