2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கை தொடர்பில் பாராபட்சம்'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, பைசல் இஸ்மாயில்

'மத்திய அரசாங்கம், கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் பாரதூரமான பாராபட்சத்துடன் நடந்து வருகின்றது. இவ்வாறான விடயத்தைக் கண்டிக்கின்றோம், இவ்வாறான பாராட்சமான செயற்பாட்டினை கிழக்கு மாகாண சபை ஒரு போதும் அங்கிகரிக்கப் போவதில்லை' என  கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று உள்ளுராட்சிமன்றம், முகம்மதியா கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டி வைத்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாணத்தில் 5021 ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வருகின்றது. இதேவேளை நாங்கள் கிழக்கு மாகாண ஆட்சியை பொறுப்பெடுக்கும்போது வலய மட்டங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு ஏனைய மாகாணங்களை விட கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் மேலதிகமாக இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை முன்னர் இருந்த ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர், செயலாளர் உள்ளிட்ட அனைவரும் வழங்கப்பட்ட தகவலை ஒட்டுமொத்தமாக நம்பி ஆசிரியர்கள் அதிகமாக உள்ளனர் என்ற அடிப்படையில் இருந்து தெரிவித்து வந்துள்ளனர்.
ஆனால், கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாகவும் அதனை நிவர்த்தி செய்து வழங்குமாறும் அதிபர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான முரண்பாட்டுடன் காணப்பட்டு வந்த ஆசிரியர் சேவை தொடர்பில் ஒரு நிலையான உடன்பாட்டுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்வி அமைச்சுக்கான செயலாளர் ஆகியோர் கல்வி வலயங்கள் தோறும் காணப்படுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை, மேலதிகமாகவுள்ள ஆசிரியர்கள் தொடர்பில் சரியான அறிக்கையை வழங்குமாறு முதலமைச்சர் என்ற வகையில் பணித்திருந்தேன்.

கடந்த மே மாதம் முதல் ஒகஸ்ட் மாதம்வரை அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி 2,568 ஆசிரியர் வெற்றிடம் காணப்படுவதாக தெரிவித்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் சேவை தொடர்பான தகவல்களை முறையாக மேற்கொண்டு வருகின்றோம்.

கிழக்கு மாகாணத்தின் தற்போதய ஆசிரிய வெற்றிடம் 5,021 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. பட்டதாரிகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களாக 1,134 வெற்றிடங்கள் உள்ளன. இந்நிலையில் நடத்தப்பட்ட பரீட்சையிலிருந்து 390 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பரீட்சையில் தேறியுள்ளனர். ஆனால் வடமாகாணத்தில் எந்தவிதமான பரீட்சைகளுமின்றி பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமையானது பாரிய முரண்பாடான விடயமாகக் காணப்படுகின்றது.

வடமாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள் பரீட்சையின்றி நிரப்பபட்டு வருகின்ற நிலையில், மத்திய அரசாங்கம் கிழக்கு மாகாண சபைக்கு மாத்திரம் நிபந்தனை விதித்து கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாகாண சபைகளுக்கு அதிகமான அதிகாரம் இருந்த போதிலும் குறைந்தளவிலான அதிகாரத்தை மாத்திரம் வைத்துக்கொண்டுள்ள மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது. இவ்வாறான முரண்பாட்டினை தடுக்கும் பொருட்டே மாகாண சபைகளுக்கான முழு அதிகாரம்மும் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு கோசம் வலுப்பெற்று வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் கணிதப் பாடத்திற்கு 434 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன. 174 பேர் விண்ணப்பித்து பரீட்சை எழுதியதில் 66 பட்டதாரிகள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசாங்கம், கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் பாரதூரமான பாராபட்சத்துடன் நடந்து வருகின்றது. இவ்வாறான விடயத்தைக் கண்டிக்கின்றோம், இவ்வாறான பாராட்சமான செயற்பாட்டினை கிழக்கு மாகாண சபை ஒரு போதும் அங்கிகரிக்கப் போவதில்லை.

பட்டதாரிகளுக்கும், டிப்ளேமா முடித்தவர்களுக்குமான அரசாங்கமே சான்றிதழ் வழங்குகின்றது. இவ்வாறானவர்களுக்கு மூன்று வருடங்களின் பின்னர் பொது அறிவு, நுண் அறிவு போன்ற பரீட்சைகளை வைத்து மட்டம் தட்டி கொச்சைப்படுத்தும் செயற்பாட்டினை உடன் நிறுத்த வேண்டும். ஆங்கிலம் கற்பிக்கின்றவருக்கு ஆங்கில அறிவே தேவையானது. அதைவிடுத்து வெவ்வேறு விடயங்களை வைத்து மேலும் ஒரு பரீட்சை நடத்துவது சிறந்த செயற்பாடாக அமையாது'என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X