2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'கிழக்கை வடக்குடன் இணைப்பதற்கு அ.இ.ம.கா. ஒருபோதும் துணைபோகாது'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர், ரீ.கே.றஹ்மத்துல்லா,எஸ்.எல். அப்துல் அஸீஸ்

இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் புறந்தள்ளிவிட்டே, வடக்குடன் கிழக்கு இணைக்கப்பட்டது. இதனால், முஸ்லிம் சமூகம் சொல்லொண்ணாத்; துயரத்தை அனுபவித்துவந்தது. நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்கு மாகாணத்துடன் இணைப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் துணைபோகாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டம், நேற்று  வியாழக்கிழமை இரவு கல்முனையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'வடக்கில் தமிழர் ஒருவரும் கிழக்கில் முஸ்லிம் ஒருவரும் முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்யும் நிலையில், கிழக்கு மாகாணசபையில்; தமிழர், சிங்களவர், முஸ்லிம் என மூன்று இனங்களையும் சார்ந்தவர்கள் அமைச்சர்களாக மக்களுக்குச் சேவையாற்றுகின்றனர்.

இந்த நிலையில், வடக்கையும் கிழக்கையும் இணைத்து மூன்று இன மக்களின் சந்தோஷமான சகவாழ்வை சீர்குலைக்கத் தேவையில்லை. கிழக்கில் வாழ்கின்ற தமிழ் புத்திஜீவிகள்  மற்றும் யதார்த்தமாகச் சிந்திக்கின்ற அரசியல் தலைமைகளும் கிழக்கை வடக்குடன் இணைத்து மக்கள் அடிமைகளாக்குவதை விரும்பவில்லை என்பதை மறைமுகமாகச் சொல்லி வருகின்றனர்.

மேலும் எதிர்காலத்தில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள அரசியல் யாப்புச் சீர்திருத்தம், அதிகாரப்பகிர்வு தொடர்பிலும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எங்கள் நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக முன்மொழிந்துள்ளோம். எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் வருமாயின் அதை நாங்கள் விட்டுக்கொடுக்கமாட்டோம்' என்றார்.

'ஆட்சி மாற்றத்துக்கு பெரும் பங்காற்றிய முஸ்லிம் சமூகத்தின் நலன், அரசியல் யாப்பு சீர்திருத்த விடயத்தில் தட்டிக்கழிக்கப்படுமாயின் எமது அமைச்சுப் பதவிகளை தூக்கி வீசிவிட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு தயங்கமாட்டோம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்றது. எதிர்வரும் 22ஆம் திகதி சம்மாந்துறையில் மாபெரும் வர்த்தகக் கண்காட்சியும் விற்பனையும் சந்தை வாய்ப்பு தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கவுள்ளன.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் 2,000 பேருக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளது. அத்துடன் நுரைச்சோலை, ஒலுவில் கடலரிப்பு, கரும்புக் காணிப் பிரச்சினைகள், பொத்துவில் பிரதேசத்துக்கான தனியான கல்வி வலயம் அமைத்தல் போன்றவற்றுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X