2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'கடலரிப்புக் காரணமாக இங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,ரீ.கே.றஹ்மத்துல்லா,எம்.எஸ்.எம். ஹனீபா

நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக் காரணமாக இங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக நிந்தவூர் மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் எம்.ஏ.ஜமால்டீன் தெரிவித்தார்.

ஒலுவில் கிராமத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான கருங்கற்கள் போடப்;பட்டு வரும் நிலையில், கடந்த 2 வாரங்களாக நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவில் கடலரிப்பு ஏற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.   

தற்போது நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைக் கட்டுப்படுத்துமாறு கோரி அங்கு இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இப்பேரணியானது, நிந்தவூர் கடற்கரையிலிருந்து ஆரம்பமாகி நிந்தவூர் பிரதேச செயலகத்தைச் சென்றடைந்தது. இந்நிலையில், நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யூ.காபித்தூள் ஜலீலிடம் நிந்தவூர் மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் மகஜரைக் கையளித்தார்.

இப்பேரணியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், நிந்தவூர் மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், கரைவலை மீனவர் சங்கங்கள், மீனவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாட்டுப்பளை, அட்டப்பள்ளம், வெளவாலோடை, மத்தியதுறை, வெட்டாத்து ஆகிய கிராமங்கள்; கடலரிப்புக் காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இக்கடலரிப்புக் காரணமாக இக்கிராமங்களைச் சேர்ந்த  மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.  
இங்குள்ள மக்களின் ஜீவனோபாயத் தொழில்களில் ஒன்றாக மீன்பிடித் தொழில் உள்ளது. கடந்த சுனாமி

அனர்த்தத்தின்போது, இங்குள்ள மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது இத்தொழிலில் மீனவர்கள் மீண்டுவரும் இவ்வேளையில், அவர்களின் தொழிலுக்கு மீளவும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது' என்றார்.  

'மேற்படி கிராமங்களின் கடற்கரையோரங்களில்; 40 கரைவலைத் தோணிகளும் ஆழ்கடல் தோணிகள் 215ஐயும் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் உள்ளது.   

மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதால், பல மீனவக்; குடும்பங்கள் பொருளாதார ரீதியான பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்' எனவும் அவர் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X