2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்வதிலேயே முனைப்புக் காட்டுகின்றனர்'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

இந்த நாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்  கட்சியும் ஜக்கிய தேசியக் கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்யும்போதிலும், நாட்டு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை விட, தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்வதிலேயே முனைப்புக் காட்டி வருகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அம்பாறை, தம்பிலுவில் -01 தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை (27) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'அன்று முதல் இன்றுவரையில் இந்த நாட்டு மக்களின் துயரங்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு சக்தி இல்லாதவர்களாகவே இருந்து வருகின்றனர்.

நாம் சுதந்திரமாக வசதிகளுடன் வீடு ஒன்றை அமைத்து வாழக்கூடிய சூழல் உள்ளதா, எமது தேவைகளை நாமே சீர் செய்யக்கூடிய வகையில் பொருளாதாரம் உள்ளதா? பிள்ளைகளுக்கு முறையான போதிய கல்வி வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளதா? மனரீதியான நிம்மதி இருக்கின்றதா நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

ஆனால், நாட்டு மக்கள் பாரிய துன்பங்களில் வாழ்கின்ற நிலையில் ஆட்சியாளர்களின் நிலைமைகள் அவ்வாறு இல்லை.
நாம் நமது வாழ் நாள் முழுவதும் செலவழிக்கின்ற பணத்தை விட அதிகமான பணத்தை ஒரு நாள் அல்லது குறிப்பிட்ட காலத்துக்குள் ஆட்சியார்கள் செலவு செய்கின்றார்கள். நமது பிள்ளைகளுக்கு படிக்க பாடசாலைகள் இல்லாத போதிலும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு படிப்பதற்கு வசதியான முறையான பாடசாலைகள் உள்ளது.

இந்த நிலைமைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் தொடர்ந்து மக்கள் சிந்திக்காமல் வாழ்வது தவறு. இவ்வாறு தொடர்ந்து பிழையான அரசியல் கலாசாரத்தினை பின்பற்றாது இதனை மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதன் காரணமாக இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றினைந்து சிறந்த மக்கள் ஆட்சி ஒன்றினை எமது கட்சியால் ஏற்படுத்த முடியும்' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X