2025 மே 22, வியாழக்கிழமை

'தடையுத்தரவை மீறி செயற்படுவது கண்டிக்கத்தக்கது'

Niroshini   / 2016 ஜனவரி 28 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தடையுத்தரவை மீறி, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் பதவி நியமனத்தை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மேற்கொண்டுள்ளமையானது கண்டிக்கத்தக்கது என இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

'வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் உட்பட கல்வித்துறை நியமனங்களை வழங்கும் அதிகாரம் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் புதிய பிரமாணத்தின் பிரகாரம், மாகாண கல்விச் செயலாளருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நடைமுறை கிழக்கு மாகாண சபையைத் தவிர ஏனைய மாகாண சபைகள் முறையாக பின்பற்றி வருகின்றன.

ஆனால், கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் இவ்வதிகாரத்தை கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிடிவாதமாக தம்வசம் வைத்துக் கொண்டு கிழக்கு மாகாண கல்வித்துறையில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதனைத் தடுக்கும் விதத்தில் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக அவரால் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சை மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட நியமனத்துக்கும் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாம் தாக்கல் செய்திருந்த வழக்கு கடந்த 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவற்றுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

ஆனால், நீதிமன்றத்தின் இத்தடையுத்தரவை கவனத்திற் கொள்ளாமல் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர், சட்டத்தை தனது கையில் எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக குறித்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஒரு பொறுப்புள்ள தொழிற்சங்கம் என்ற ரீதியில் இலங்கை கல்வி நிர்வாக அதிகாரிகளாக கடமையாற்றுவோரின் உரிமைகளையும் நலன்களையும் கடமைகளையும் பேணிப் பாதுகாக்கும் நோக்கிலேயே இத்தடையுத்தரவைப் பெற்று நியாயம் கோரியுள்ளோம்.

ஆகையால், இத்தடையுத்தரவு மீறப்பட்டமை தொடர்பில் நாம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X