2025 மே 17, சனிக்கிழமை

'நல்லாட்சி நிலவுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை'

Niroshini   / 2016 நவம்பர் 22 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

“காவியுடை தரித்து பற்றற்ற வாழ்வு வாழ்கின்ற மதகுருமார்கள் இனவாதம் பேசி சிறுபான்மை மக்களை நசுக்கினால், இந்த நாட்டில் நல்லாட்சி நிலவுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை” என கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ் உதுமாலெவ்வை நேற்றுத் திங்கட்கிழமை தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களிடம் வாசிப்புத் திறனை மேம்பாடு செய்வதற்கான செயற்றிட்ட நிகழ்வின்போதே விசேட  அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

“குறிப்பாக இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும், இன நல்லுறவையும் ஏற்படுத்த வேண்டிய மத குருக்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை பகிரங்கமாக பேசி, அவர்களின் மதங்களையும் கொச்சைப்படுத்தும் செயற்பாடானது, இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நாட்டில் பெரும்பான்மையினத்தவருடன் சிறுபான்மைச் சமூகம் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்ந்து வந்த வரலாற்று தொடரில், இன்று சிங்கள சமூகம் சிறுபான்மையினரை கோபத்துடன் தீண்டத்தகாத பொருளைப் பார்ப்பதைப் போன்று பார்த்து வருகின்றனர். இதற்கு பிரதான காரணம் இனவாதம் பேசுகின்ற பௌத்த மதகுருமார்களில் ஒரு சிலரும், இனவாதம் கொண்ட அமைச்சர்கள் சிலரும் என்பதை மக்கள் இனங்கண்டுள்ளார்கள் .

நல்லாட்சி என்று சொல்கின்ற இந்த நாட்டில் நீதியமைச்சர் நாடாளுமன்றில் ஆற்றிய உரை, அம்பாறை மாவட்டத்தின் மிக முக்கியமான அமைச்சர் தயாகமகேயின் உரை மற்றும் மட்டக்களப்பு விகாராதிபதியின் ஒழுக்கமற்ற தன்மை என்பவற்றைப் பாரக்கின்ற பொழுது நல்லாட்சி என்பது கேள்விக்குறியாகவுள்ளது.

இந்த நாட்டில் சகல இனமக்களும் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் கலந்து வாழ்வதற்கு அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும். இதற்குரிய ஏற்பாட்டை ஜனாதிபதி, பிரதமர் முன்னெடுத்து இன நல்லுறவை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .