2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'பிரதேச செயலகங்களில் சிறுவர் பாதுகாப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது'

Niroshini   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

சிறுவர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கத்தினால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு பிரதேச செயலகங்களில் சிறுவர் பாதுகாப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம். முஸரத் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச செயலகத்தின் சிறுவர் மகளிர் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் புதன்கிழமை(14) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சிறுவர்களைப் பற்றி 1954ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு சபையில் செய்யப்பட்ட பிரகடனத்துக்கமைவாக சிறுவர்கள் உலகின் இளம் தலைவர்கள், அவர்கள் இலகுவாக பாதிக்கப்படக் கூடியவர்கள், அவர்களிடத்தில் சுரண்டல்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஏதுவான குழுவினர்கள், துஷ்பிரயோகத்துக்கு இலகுவாக ஆளாக்கப்படக் கூடியவர்கள் என்ற அடிப்படையில் சமூகத்தில் பெற்றோர்களாகிய எமக்கு அவர்களின் நலன்களைத் தேடிப் பார்த்து ஆராய்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய கடமைப்பாடு கொண்டவர்களாக இருக்கின்றோம்.

அந்தடிப்படையில், இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்கு செய்து சமூகத்தில் சிறுவர்கள் மீதான சுரண்டல்கள், துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாத்து அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும்.

இதற்காகவே, இன்று அரசாங்கம் சிறுவர்களின் பாதுகாப்புக்கு என தனி அவசர தொலைபேசி சேவை, அமைச்சு ஒன்றினையும் பிரதேச செயலகங்களில் சிறுவர் பாதுகாப்பு அலகொன்றையும் ஆரம்பித்துள்ளது.

நாம் சிறுவர்களின் நலன்களுக்காக பல தரப்பட்ட அமைப்புக்களை இணைத்து இது போன்ற பல நிகழ்ச்சித்திட்டங்களை செய்து வருகின்றோம். சமூகத்தில் பெரியவர்கள் என்ற அடிப்படையில் சிறுவர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை உரிய இடத்தில் அறிவிப்பதற்கு கூட இன்று அரசால் திட்டங்கள் வழிவகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இன்று எமது பிரதேசத்தில் சிறுவர்கள் வீதியோர வியாபாரங்களிலும் பாடசாலைக் கல்வியினை இடைநிறுத்தியவர்களாகவும் பலர் காணப்படுகின்றனர்.

எனவே சமூகத்தில் கல்வி நிலையில் உள்ள நாம் இவ்வாறான சம்பவங்களை காணும் போது உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு பெற்றுக் கொடுக்கக் கூடியவர்களாக மாறவேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X