2025 மே 19, திங்கட்கிழமை

'மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரத்தை வழங்க வேண்டும்'

Niroshini   / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரத்தை வழங்கி வட, கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரும் தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ் உதுமாலெவ்வை தெரிவித்தார்.

புதிய அரசியல் அமைப்பில் மாகாண சபை அதிகாரங்கள்  எவ்வாறு அமைய வேண்டுமென ஊடகங்களுக்கு நேற்று (12) கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

“நமது நாட்டில் அமைந்துள்ள 9 மாகாண சபைகளுக்கும் சமனான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். ஒரே நாட்டில் மாகாண சபை முறைமை அமுல்படுத்தும் போது 7மாகாண சபைகளுக்கு ஒரு முறைமையும் வட கிழக்கு மாகாண சபைகளுக்கு வேறு விதமான முறைமையும் அமுல்படுத்துவது குறித்து வட, கிழக்கு மக்கள் மாகாண சபை முறைமையில் நம்பிக்கையிழக்கும் நிலமை உருவாகியுள்ளது. எனவே மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரத்தை வழங்கி வட,கிழக்கு மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக இனப்பிரச்சிணைக்கான தீர்வுகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் வழங்குவார் என வட,கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் நம்பிக்கை வைத்து சந்திரிக்கா அம்மையாருக்கு ஜனாதிபதித் தேர்தல்களில் வாக்களித்தனர். இனப் பிரச்சினைக்கான தீர்வினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் முன்வைத்த போது நமது நாட்டில் உள்ள இனவாத அரசியல்வாதிகளால் அத்தீர்வுத்திட்டம் எரிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 30 வருட காலமாக நமது நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினை இல்லாமல் செய்த போதும் இனப் பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப்பரவலாக்கம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் நமது நாட்டில் உள்ள இனவாத சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள் அத்திட்டத்திற்கு தடையாக இருந்து செயற்பட்டனர்.

இதன் காரணமாகவே நமது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தமில் பேசும் மக்களின் அதிக ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். தமிழ் பேசும் மக்கள் புதிய ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கி அதிகார பகிர்வினை வழங்குவார் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். எனவே, நமது நாட்டில் உள்ள இனவாதிகள் சிலருக்காக அரசாங்கம் அதிகாரப்பகிர்வினை மேற்கொள்ளும் விடயத்தில் தாமதம் காட்டக்கூடாது.

குறிப்பாக மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று கூட 13வது சரத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்தமுடியாத துர்ப்பாக்கிய நிலமை ஏற்பட்டுள்ளது. தற்போது அமைந்துள்ள 13வது சரத்தின் படி ஆளுனர்களுக்கு அதிகாரங்கள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் மாகாண ஆளுனர்களோடு முரண்படுவதை தவிர்த்து விட்டு மாகாண சபைகளுக்கு அதிகமான அதிகாரங்களை வழங்கி ஆளுனர்களுக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தக்கூடிய வகையிலே புதிய அரசியல் அமைப்பு உருவாக்க வேண்டும்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X