2025 மே 22, வியாழக்கிழமை

'முறைகேடுகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது'

Niroshini   / 2016 ஜனவரி 31 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பிலான முறைகேடுகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஒரு எம்.பி. மூலம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கிழக்கு மாகாணத்தில் பல சிரேஷ்ட, சேவை மூப்பு கூடிய, தகைமை வாய்ந்த கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் கடமையாற்றி வருகின்ற போதிலும் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கு சுமார் இரண்டு வருட காலமாக பொருத்தமான ஒருவரை மாகாணக் கல்வி நிர்வாகம் தேடி வருகின்றமை வெட்கக்கேடான விடயமாகும்.

இப்பதவிக்காக 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின்போது, இலங்கை கல்வி நிர்வாக சேவையின் இரண்டாம் வகுப்பு சிரேஷ்ட முதுநிலை உத்தியோகத்தர்கள் தோற்றியிருந்த போதிலும் மூன்றாம் வகுப்பு விசேட ஆளணி வகையைச் சேர்ந்த ஒருவர் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு நியமனம் வழங்கும்போது 'பொருத்தமான உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்படும் வரை' எனும் வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் இரு வருடங்களாகியும் அத்தகைய ஒருவரை கிழக்கு மாகாண சபை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது.  

அவ்வாறாயின் தற்போது சேவையில் உள்ள கல்வி நிர்வாக சேவை இரண்டாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் எவரும் இப்பதவிக்கு தகுதியற்றவர்கள் என கருதப்படுகின்றதா? அவ்வாறாயின் அவர்களுக்கு இரண்டாம் வகுப்பு பதவிக்கான சம்பளம் எவ்வாறு வழங்கப்படுகிறது? அவ்வாறானவர்களை ஏன் தொடர்ந்தும் சேவையில் வைத்திருக்க வேண்டும் என்பன பற்றி கிழக்கு மாகாண கல்வி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்.

தற்போது இலங்கை கல்வி நிர்வாக சேவையின் புதிய பிரமாணக் குறிப்பு அமுலுக்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் தகுதியற்ற விசேட ஆளணியினரை நீக்கி விட்டு சட்டப்படி தகுதியுடைய பொது ஆளணி சிரேஷ்ட உத்தியோகத்தரை சம்மாந்துறை வளாகக் கல்விப் பணிப்பாளராக நியமிப்பதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு முன்வர வேண்டும்.

இது தொடர்பாக இலங்கை கல்வி நிர்வாக சேவை கிழக்கு மாகாண சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் இடையீட்டு மனுதாரர்களில் ஒருவராக எமது சங்கமும் இணைந்து கொள்ளவிருக்கிறது.

அத்துடன், இந்த சர்ச்சை தொடர்பில் நாம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதுடன் ஒரு எம்.பி. மூலம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கும் ஒழுங்கு செய்துள்ளோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X