2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'முஸ்லிம் காங்கிரஸ் மிகப் பக்குவமாக அரசியல் நகர்வுகளை முன்னெடுத்துள்ளது'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

'எமது நாட்டில் புதிய அரசியலமைப்பு மாற்றம், இனப் பிரச்சினைக்கான தீர்வு, தேர்தல் முறை மாற்றம் ஆகிய முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் பக்குவமாக தனது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்துள்ளது என மு.கா தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

'இந்த வேளையில் எமது கட்சியைப் பலவீனப்படுத்தி, அதன் மூலம் முஸ்லிம்களைப் பலவீனப்படுத்தலாம் என்ற சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், அதை   முறியடிப்பதற்கு  எமது கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றுபட வேண்டும்' எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

'அபிவிருத்தி இலக்கின் இன்னுமோர் அடைவுத் தருணம்' எனும் தொனிப்பொருளில் பொதுக் கூட்டம், சம்மாந்துறையில்  செவ்வாய்க்கிழமை (11) இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,'முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அம்பாறை மாவட்டத்தின் அனைத்து அரசியல் அதிகாரங்களையும் மாற்றுக் கட்சிக்காரர்களின் கைகளில் இல்லாமல் முழுமையாக வைத்திருக்கின்ற கட்டத்திலேயே இந்தக் கட்சியைப் பலவீனப்படுத்துவதற்கு சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை' என்றார்.

'கடந்த 15 வருடகாலமாக அபிவிருத்தி இலக்குகள் என்ற விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அடைவு குறைவாக இருந்தது. அதற்கான காரணங்கள் நிறையவே இருந்தாலும்,  இந்த ஆட்சியில் எஞ்சி இருக்கின்ற நான்கு வருடகாலத்தில் இதுவரை காலத்தில் அடைய முடியாத அத்தனை அபிவிருத்திகளையும் அடைவதற்கான முயற்சியில் நாம் முழுமையாக  ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

மேலும்; எங்களது காணிப் பிரச்சினை, வில்பத்துப் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளையும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

தற்போது முழு அரசியல் அதிகாரத்துடன் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸானது இவ்வாறான பணிகளைச்  சரியாகச் செய்ய வேண்டும். எமது சமூகம் எதிர்நோக்குகின்ற பல சவால்களுக்கு தீர்வுகளை எட்டுவதற்கு நாம் பாடுபட்டு வருகின்றோம்.
எமது கட்சியின் கட்டமைப்பை கிராமங்கள் தோறும் மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என்பதுடன்,      கடந்தகால கசப்புணர்வை மறந்து அனைவரும் ஒன்றாகப் பயணிக்கும் புதிய யுகத்துக்கு எல்லோரையும் இட்டுச் செல்லும்  உற்சாகம் எமது கட்சியின் உறுப்பினர்களுக்கு ஏற்பட வேண்டும். அப்போதே, எமது சமூகத்தின் அரசியல் தீர்வு உட்பட அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X