Suganthini Ratnam / 2016 மார்ச் 13 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, பைஷல் இஸ்மாயில்,எம்.எஸ்.எம்.ஹனீபா,யூ.எல்.மப்றூக்
வாரிசுரிமை அரசியலுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இடம் கிடையாது. இவ்வாறான வாரிசுரிமை அரசியலுக்கு முடிவு கட்டியதொரு கட்சியாக மு.கா. காணப்படுவது மட்டுமல்லாது, அவ்வாறான எண்ணங்களுடன் வந்தவர்களும் தோற்றுப்போய்ச் சென்றுள்ளதாக மு.கா. தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மு.கா. வின் தேசிய மாநாட்டை முன்னிட்டு பாலமுனைப் பிரதேசத்தில் சனிக்கிழமை (12) நடைபெற்ற இளைஞர் தொண்டர் அணியினருக்கான கூட்டத்திலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'மு.கா. வின் தலைமைத்துவக் கட்டுப்பாடுகளை இழந்து தங்களின் பேராசைக்காக கட்சியை அழிக்க எத்தனிப்பதும் சதாகாலமும் நாங்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டுமென எண்ணுவதும் எமது சமூகத்துக்குச் செய்யும் துரோகமாகும்;.
தன்னலம் கருதி கட்சிக்கும் சமூகத்துக்கும் எதிராகச் செயற்படுவர்களை தலைமைத்துவம் சும்மா பார்த்துக்கொண்டிருக்காது. அவர்களைக் கட்டுப்படுத்தும்போது தலைமைத்துவத்தை விமர்சிப்பதும், தலைவர் பிழையாகச் செயற்படுகின்றார் என்று தவறான வாதங்களைப் பரப்புவதும் இவ்வாறானவர்களின் செயற்பாடாகும்.
விமர்சனங்கள், பழிகள் சுமத்தப்பட்டாலும் கட்சியின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு அடுத்த பரம்பரைக்கு முறையான கட்சியாகக் கொண்டுசெல்வதற்கு தலைமைத்துவம் திடசங்கற்பம் பூண்டுள்ளதை எவரும் மறக்கக்கூடாது' என்றார்.
இந்தக் கட்சியின்; மீது உண்மையான விசுவாசம் இருப்பவர்கள் அடுத்த பரம்பரைக்கு இந்தக் கட்சியை கொண்டு செல்வதாக இருந்தால், அவர்கள் இந்தக் கட்சியில் படியேறிவந்து உயர் இடங்களில் அமர்வதற்கான அந்தஸ்தையும் பின்புலத்தையும் உருவாக்குவதற்கு திடசங்கற்பம் பூணவேண்டும்.
இந்த நாட்டில் வன்முறைப் போராட்டம் வெடித்த காலகட்டத்தில் முஸ்லிம் இளைஞர்கள் வன்முறைக்குத் தள்ளப்படாமல் பாரிய அழிவிலிருந்து பாதுகாப்பளித்த மாபெரும் கட்சியாக மு.கா. செயற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்' எனவும் அவர் கூறினார்.
'எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மு.கா. வின் மாநாட்டுக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முன்னிலையில் எமது சமூகத்தினதும் பிரதேசங்களினதும் பிரச்சினைகள், கட்சி எதிர்கொண்டுள்ள சவால்களை எடுத்துரைத்து அவற்றுக்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025