2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்தால், முஸ்லிம்களின் சனத்தொகை குறையும்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாணத்தில் 39 சதவீதம் தமிழர்களும் 37 சதவீதம் முஸ்லிம்களும் உள்ளனர். ஆகவே வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்தால், முஸ்லிம்களின் சனத்தொகை 17 சதவீதமாக குறைந்துவிடுமென அம்மாகாண முஸ்லிம் சிவில் அமைப்புகளினுடைய ஒன்றியத் தலைவர் மௌலவி எம்.நதீர் தெரிவித்தார்.

இந்த இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட்டிருந்த 20 ஆண்டுகால அனுபவத்தின்படி தாம் சமஷ்டி ஆட்சியை எதிர்ப்பதாகவும் ஏனெனில், அதிகாரம் பகிரப்படும்போது தாம் சிறுபான்மையினராகி விடுவோமெனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கிழக்கு மாகாணத்தின் வரலாறு தனியான மாகாணமாகவே இருந்துவந்திருக்கிறது. 1987இல் இந்திய -இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின்னரே இந்த நிலைமை மாறியது' என்றார்.

'வடக்கிலுள்ள சகோதரர்களிடத்திலிருந்து கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் கலாசார, சமூக, அடையாள ரீதியாக வேறுபடுகிறார்கள். எனவே வடக்கு, கிழக்கு இணைப்பு ஆபத்தான விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்துமென்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

தமிழ்மொழி பேசும் மக்களின் கலாசாரத் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமென்றும் இதற்குத் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் மக்கள் உதவ வேண்டுமென்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டின்போது தெரிவித்திருந்தார்.

இவ்வாறு கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பின் கீழ் அதிகாரங்களைப் பகிரும்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக்கூடாதென்று கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், இது தொடர்பில் கிழக்கின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கூட்டம் கடந்த திங்கட்கிழமை (08) கல்முனையில் நடைபோது, வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X