2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் நிலங்களை அரசாங்கம் அபகரிக்கின்றது: மாவை

Super User   / 2012 செப்டெம்பர் 02 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


"வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இந்த அரசாங்கம் தமிழ் பேசும் மக்களின் நிலங்களை அபகரிக்கின்றது. சிறுபான்மை இனங்களின் வழிபாட்டுத் தலங்களை அழித்தொழிக்கின்றது. தமிழ் பேசும் மக்களின் நிலங்களில் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குகின்றது.

தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில்தான் வாழ விரும்புகின்றார்கள் என்பதை உறுதிபடத் தெரிவிப்பதற்கான மிகச் சரியான சந்தர்ப்பம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலாகும்" என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தில் த.தே.கூட்டமைப்பு சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் த. கலையரசனை ஆதரித்து நேற்று சனிக்கிழமை 15ஆம் கிராமத்தில் பிரசாரக் கூட்டமொன்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

"கிழக்கு மாகாணத்தை இந்த அரசாங்கம் இராணுவ மயப்படுத்தி வருகின்றது. ஏற்கனவே, இந்தக் காரியத்தை வடக்கில் தொடங்கி விட்டார்கள். இந்த இராணுவ மயமாக்கலுக்கு எதிராக த.தே.கூட்டமைப்பு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்த அரசாங்கம் தன்னுடைய குற்றங்களை மறைப்பதற்காகவே, கிழக்கு மாகாணசபைத் தேர்தலை ஒரு வருடத்துக்கு முன்னராக நடத்துகின்றது. அரசாங்கத்தின் போய்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.

இதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் பல்வேறு தந்திரங்களை அரசாங்கம் கையாண்டு வருகிறது. அதில் ஒரு தந்திரம்தான் கிழக்கு மகாணசபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதாகும்.

இந்தத் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறுவதன் மூலம் சர்வதேசத்திடமிருந்து தப்பி விடலாம் என நினைக்கிறது. கிழக்குத் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற்றுவிட்டால், 'தமிழ் மக்கள் அரசாங்கத்தைத்தான் ஆதரிக்கின்றார்கள், அரசாங்கம் குறித்து த.தே.கூட்டமைப்பு சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை' என்று ஆட்சியாளர்கள் கூறத் தொடங்கி விடுவார்கள். எனவே தான், இந்தத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பினை வெற்றி பெறச் செய்ய வேண்டியுள்ளது.

எமது மண்ணை நாமே ஆள வேண்டும் என்பதற்காவே நாம் பல வழிகளிலம் வாதாடி வருகின்றோம். 03 லட்சத்துக்கும் மேற்பட்ட நமது மக்கள் தற்போது, தமது சொந்த மண்ணை இழந்துள்ளார்கள். பலர் வெறிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் தமது நிலங்களில் மீள்குடியமர்த்தப்படாமல் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த மக்கள் தமது நிலங்களில் குடியேறுதற்கு அரச ராணுவமே தடையாக உள்ளது.

தமிழ் மக்களின் உறுதிக் காணிகளிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டு, அந்த இடத்தில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர். தமிழ் பிரதேசங்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் வரும் சிங்களவர்கள் - தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் மூலம் மீன் பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர்" என்றார்.

இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் கலையரசன் உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X