2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைப்பதை முஸ்லிம் சமூகம்; ஏற்றுக்கொள்ளாது: மௌல

Super User   / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கூட்டமைப்பை ஆட்சியில் அமர்த்தியிருந்தால் அது, வரலாற்று  தவறாக அமைந்திருக்கும். முஸ்லிம் சமூகம் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதி தலைவரும் அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல்  உலமா சபையின் தலைவருமான மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை நோக்கி 'புலிகள், புலிகள்' என கூக்குரலிடுவதற்கும் அது வழியாக அமைந்திருக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புலிகளின் கட்சி என கூறி முஸ்லிம் சமுதாயத்திடமிருந்து அதனை ஓரம் கட்ட சிலர் போட்டிருந்த திட்டமும் வெற்றியடைந்திருக்கும்.
அதனை பொறுக்க முடியாதவர்களே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரலாற்று தவறிழைத்ததாகக் கூப்பாடு போடுகின்றனர் கடந்த மாகாண சபை தேர்தலிலும் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் கிழக்கு முஸ்லிம்கள் தங்களது கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பதை நிரூபித்துள்ளனர்.
அரசாங்கம், அமைச்சர்கள் மற்றும் அபிவிருத்தி என்பதை எல்லாம் விட தங்கள் குரலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையே அவர்கள் தெரிவு செய்துள்ளனர். முhகாண சபை தேர்தலின் பின் ஏழு ஆசனங்களை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன் இரு தெரிவுகள் இருந்தன.
ஒன்று அரசாங்கம். மற்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு. இவ்விடத்தில் உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல்  ஆற அமர சிந்திக்க வேண்டிய பொறுப்பும் தமது மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களைத் தீட்ட வேண்டிய தேவையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இருந்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழர் கூட்டமைப்புக்கு ஆதரவு அளித்திருந்தால் முஸ்லிம் ஓருவர் முதலமைச்சராக வந்திருக்கலாம். ஏழு பேரை மாத்திரம் தன் வசம் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சர் தமது கட்சி சாராத பதினைந்து பேரின் பிடிகளுக்குள் அகப்பட்டே செயற்பட வேண்டி வந்திருக்கும்.
முஸ்லிம் மக்கள் விரும்பாத வட, கிழக்கு இணைப்புக்கு ஆதரவு தேடுபவராகவும் அதற்காக பாடுபடுபவராகவும் அவர் மாற வேண்டி வந்திருக்கும். ஜெனீவாவில் பிரச்சினை வருகின்ற போது அரசுக்கு எதிராக அவர் அங்கு போக வேண்டியிருக்கும். பொதுவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துபவராகவும் அவர் மாற வேண்டியிருக்கும்.
புலிகளின் காயங்களால் ஆறாது நொந்து போயுள்ள முஸ்லிம் சமூகம் இதனை அங்கீகரிக்குமா? புலிகளால் வெளியேற்றப்பட்டு முகாம்களில் இன்னமும் வாழும் வட பகுதி முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வார்களா? காத்தான்குடியிலும், ஏறாவூரிலும் வரும் சுஹதாக்கள் தினங்களில் இவர் என்ன பேசுவார்? இவ்வாறான மறக்க வேண்டிய விடயங்களை எழுத வேண்டி வந்தமைக்காக வருந்துகிறேன்.
எனவே, முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸூக்கும் தமிழர் உரிமைகளிற்கு தார்மீக ஆதரவு வழங்குபவர்கள் என்பதற்காக அவசரப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு இரண்டற கலக்க முடியாது. அதற்கு இன்னும் காலம் கனிய வேண்டியுள்ளது.
எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேராமல் தவிர்ந்து கொண்டமை அவர்களது அரசியல் சாணக்கியமும் தூர பார்வையும் தமிழ் - முஸ்லிம் உறவுக்கு அவசியமானதுமாகும். அதேவேளை அரசுடன் இணைவதாக எடுத்த முடிவு பாராட்டத்தக்கதாகும்.
ஏனெனில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரும்பிய ஒருவர் முஸ்லிம் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நியமன பத்திரம் தாக்கல் செய்ய முன் முஸ்லிம் முதலமைச்சர் என்ற பேச்சைத் தட்டிக்கழித்த அரசு இன்று இறங்கி வந்துள்ளது. அரசின் பங்காளி கட்சிகள் சமர்ப்பித்த முதலமைச்சர் பெயரை நிராகரித்து தாம் விரும்பும் ஒருவரையே அப்பதவிக்கு ஏற்றுள்ளது' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X