2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

'எனக்கு அமைச்சுப் பதவி கிடைக்கவில்லையென்பதற்காக கட்சியை காட்டிக்கொடுக்கவோ மக்களை நட்டாற்றில் விடவோமா

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 30 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ,ஜே.எம்.ஹனீபா)

எனக்கு அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக ஒருபோதும் கட்சியைக் காட்டிக்கொடுக்கவோ வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டுவிடவோ கிஞ்சித்தும் முற்படமாட்டேன் என கிழக்கு மாகாணசபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபையின் மு.கா.கட்சிக் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல்  தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் மாகாணசபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர்  நேற்று சனிக்கிழமை தனது சொந்த ஊரான சாய்ந்தமருதுக்கு அவர் வருகை தந்தார். தனது அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொதுமக்கள்  சந்திப்பில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'அம்பாறை மாவட்டம் பூராகவும் இருந்து 22,357 மக்கள் என்னை அங்கீகரித்து வாக்களித்துள்ளார்கள். இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விரோதமாக நான் எந்தத் தவறான நடவடிக்கைகளிலும் எந்த வற்புறுத்தலின் பேரிலும் ஈடுபடப்போவதில்லை .

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நமது பெண்கள் நோன்பு நோற்று துஆ செய்து பாரிய போராட்டத்துக்கு மத்தியில் வளர்த்தெடுத்த கட்சி. இந்த கட்சியை சீரழிக்க நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. அதற்காக எந்த சக்திக்கும் துணை போகவும்மாட்டேன்.

கடந்த மாகாணசபைத் தேர்தலைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்துகொள்வது என முடிவு செய்ததன் பின்னர் கட்சி தனது பேரம் பேசும் சக்தியைக் கொண்டு அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

இதன் பயனாக அரசாங்கத்தின் சார்பாக பல உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக நமது கட்சிக்கு கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. இந்த அமைச்சுப் பதவிகளை யார் யாருக்கு பகிர்ந்துகொள்வது என்ற விடயத்தில் தலைவரிடம் ஒருமித்த கருத்து இருந்தது.

ஆனால், எமது உள்ளூர் அரசியல்வாதிகளில் சிலரின் சதியால் அந்த அமைச்சு எனது கையை விட்டுச் சென்றது. கடந்த காலங்களில் எதிர் அணியில் இருந்து கொண்டே நமது சமூகம் சார்ந்த பல்வேறுபட்ட வேலைகளை செய்துள்ளேன். இனியும் அவ்வாறே செய்வேன்.

என்னிடம் அமைச்சர் என்ற இறப்பர் முத்திரை மாத்திரம் தான் இல்லையே தவிர, ஏனைய அனைத்து தகுதிகளும் திறமைகளும் ஆளுமையும் உண்டு. அவற்றின் மூலம் இந்த மக்களுக்கான தேவைகளை பெற்றுக்கொடுப்பேன். முதலமைச்சரும் ஆளுநரும் எனக்கு பல உத்தரவாதங்களை வழங்கி உள்ளார்கள். எனது அலுவலகம் வழமையை விட துடிப்புடன் இயங்கும். உங்களது தேவைகளை இங்கு நிறைவேற்றிக்கொள்ளலாம்.

எனக்கு அமைச்சுப் பதவி கிடைப்பதைத் தடுத்த பச்சோந்திகள் இந்த கட்சியை விட்டும் என்னை துரத்த முயற்சிக்கின்றனர். இந்த விடயத்தில் அவர்கள் நிச்சயம் தோற்றுப்போவார்கள். என்னுடன் மக்கள் சக்தி இருக்கின்றது. எந்தக் காரணம் கொண்டும் இந்தக் கட்சியை விட்டு நான் வெளியேறப் போவதுமில்லை. வெளியேற்றவும் முடியாது. இந்த வக்கற்றவர்களால் என்னைத் துரத்தவும் முடியாது.

எமது மண்ணுக்கு கிடைக்க இருந்த அமைச்சர் அந்தஸ்த்தை தடுத்தவர்கள் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றைக் கூட்டி நான் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் குண்டுகளை வெடிக்க வைப்பதாகவும் கூறியுள்ளனர்.

இவர்களை அச்சுறுத்தவேண்டிய தேவை எனக்கு இல்லை. அப்படியான சில்லறை அரசியல்வாதி நான் இல்லை என்பதை இந்த மக்கள் சபை நன்கு அறியும். யார் கடந்த மாநகரசபை தேர்தலைத் தொடர்ந்து வீடுகளையும் கல்வி நிறுவனங்களையும் உடைத்தார்கள்? யார் குண்டுகளை வெடிக்க வைத்தார்கள் என்று ஊர் உலகம் நன்கறியும்.

சில்லறைகளின் அச்சுறுத்தல்களுக்கு நான் ஒருபோதும் அடிபணியப்போவதும் இல்லை. அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதற்காக எனக்கு வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டு விட்டு செல்லப்போவதுமில்லை'.என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X