2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

தேர்தல் காலத்தில் மட்டும் உதவுபவன் நானில்லை: அமைச்சர் அதாவுல்லா

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 30 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மாத்திரம் வருவார்கள். வந்து பல விடயங்களைச் சொல்வார்கள். தேர்தல் முடிந்த பின் இன்னுமொரு தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரே அவர்களைக் காண முடியும். ஆனால் தேசிய காங்கிரஸும் நானும் அப்படி நடந்துகொள்ளமாட்டோம் என அமைச்சர் அதாவுல்லா தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச சபை இவ்வளவு ஆண்டு காலமாக ஒரு நீத்துக் கட்டிடம் ஒன்றிலேயே இயங்கி வந்தது. ஒரு புதிய கட்டிடத்தை அமைத்துத் தருமாறு பொத்துவில் பிரதேசபை தவிசாளர் வாசித்தும் தேசிய காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளருமான பதுர்கானும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவிடம் வேண்டிக் கொண்டதற்கமைய தனது அமைச்சின் 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நவீன மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் இன்று நடப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஏ.எல்;.எம்.அதாவுல்லா மேற்படி குறிப்பிட்டார். ஆவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...
 
அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மாத்திரம் வருவார்கள். வந்து பல விடயங்களைச் சொல்வார்கள். தேர்தல் முடிந்த பின் இன்னுமொரு தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரே அவர்களைக் காண முடியும். ஆனால் தேசிய காங்கிரஸ் அவ்வாறில்லை. தேர்தல் காலத்திலும் வருவோம், தேர்தல் முடிந்து சூடு ஆறுமுன்னரும் இன்று வந்திருக்கின்றோம். தேர்தல் காலத்தில் கூட நான் இந்த அடிக்கல்லினை நட்டிருக்கலாம், எனது அமைச்சினூடாகவே இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நான் எப்போதும் அடிக்கல் வைக்கலாம். இருந்தும் தேர்தல் காலத்தில் உங்களது தவிசாளர் வாசித் - முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர் என்பதனால் அவர் அவரது கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தார். மாறாக அன்று நான் தேர்தல் காலத்தில் பிரதேச சபைக் கட்டிடத்திற்கு கல்லை வைக்க வந்திருந்தால் அவரும் அக்கூட்டத்திற்கு சமூகமளித்திருக்க வேண்டும். அத்துடன் நான் அன்று வெற்றிலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களை சொல்லிருக்கவும் வேண்டும். அவரை மேடையில் வைத்துக் கொண்டு நான் வெற்றிலைக்கு வாக்களிக்க சொல்லுவது சரியில்லை என்பதற்காகவே நான் அடிக்கல்லினை தேர்தல் காலத்தில் வைக்கவில்லை. அவ்வாறு செய்து தவிசாளர் வாசித்தை சங்கடப்படுத்தவும் நான் விரும்பியிருக்கவுமில்லை.

பொத்துவில் பிரதேசம் இன்னும் அபிவிருத்தியில் தவழுகின்றது. பொத்துவில் மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும். நீங்கள் யாருக்கோ வாக்களிக்கின்றீர்கள், அபிவிருத்திகளை நான் செய்ய வேண்டும். இருந்தும் அபிவிருத்திகளை அல்லாஹ்வுக்காகவும் உங்களுக்காகவும் செய்கின்றேன். பொத்துவில் பிரதேசசபைக் கட்டிடத்திற்குள் நான் முதலாவதாக சென்றபோது ஆச்சரியப்பட்டேன். இந்த நூற்றாண்டில் இவ்வாறானதொரு நீத்துக் கட்டிடமா? என்று எனது மனம் வேதனைப்பட்டது. அன்றைய தினமே நான் ஒரு புதிய கட்டிடத்தை அமைத்துத் தருவேன் என்று உறுதியளித்தேன். இன்று அல்ஹம்துலில்லாஹ் எனது அமைச்சினூடாக அதற்கான பணத்தினையும் ஒதுக்கி அடிக்கல்லினையும் நட்டிருக்கின்றேன். இதுதான் தேசிய காங்கிரஸ். நாங்கள் அரசியலுக்காக மக்களை ஏமாற்றுவதில்லை, அரசியலுக்காக பொய் சொல்லுவதுமில்லை. செய்வதை தேசிய காங்கிரஸ் சொல்லும், சொல்வதை தேசிய காங்கிரஸ் செய்யும். இதுதான் தேசிய காங்கிரஸிற்கும் வேறு கட்சிகளுக்குமுள்ள வேறுபாடாகும். பாருங்கள் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பள்ளிக்கதைகளையும், உடைத்த கதைகளையும் வைத்து மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி பாரிய பொய்களையும் சொன்னார்கள். அதற்காக நீங்கள் ஏமாந்துதானே போனீர்கள். உங்களுடைய தகப்பன் உங்களுக்காக இரவு பகலாக உடம்மை வருத்தி உழைத்து உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் தந்து கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ வந்து எவனோ தந்த ஒரு சின்ன சொக்லேட்டுக்குப் பின்னால் செல்வதாயின் தகப்பனின் நிலை என்ன? தகப்பன் எதற்காக உடம்மை வருத்தி உங்களுக்காக உழைக்க வேண்டும்? இருந்தும் தகப்பன் என்பவன் அதற்காக தனது பிள்ளையை கோபித்துக்கொள்ள மாட்டான், அதுதான் உண்மையான பாசமுள்ள தகப்பன். அதேபோன்றுதான் பொத்துவில் மக்களுடன் எனக்கு எந்தக் கோபமுமில்லை. அதனை இன்றைய பிரதேச சபை கட்டிடத்திற்கான கல்நடும் விழா சாட்சி கூறும்.

பொத்துவில் மக்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள், இன்னும் நீங்கள் அரசியலில் அனாதையாக்கப்படப் போகின்றீர்களா? பொத்துவில் மண்ணுக்கு எவ்வளவு பிரச்சினைகள் உள்ளன. நான் உங்களது பல விடயங்களை திட்டமிட்டு உங்களுக்காகவும் செய்ய வேண்டுமென்று கனவு கண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது நீங்கள் யார் பின்னாலேயோ செல்கின்றீர்கள். இனியும் பொத்துவில் மக்கள் இழப்பதற்கு ஒன்றுமேயில்லை. இன்று நீங்கள் மாகாண சபை உறுப்பினரையும் இழந்திருக்கின்றீர்கள். பிறர் உங்களது மண்ணை தீர்த்தக்கரையாக பாவித்திருக்கின்றனர். இனிமேல் நீங்கள் வரலாற்றில் நடந்த பிழைகளைச் செய்ய வேண்டாம். தேர்தல் வந்தால் உங்கள் வாக்குகளை அள்ளிப் போடுகின்றீர்கள். அள்ளிப் போட்டவர்கள் உங்களுக்கு செய்தது என்ன? பொத்துவில் மக்கள் வாக்குகளை அள்ளிப் போடாவிட்டாலும் அதாவுல்லா உங்கள் மண்ணுக்கு நிறைய செய்திருக்கின்றான். மாகாண அமைச்சர் உதுமாலெப்பையும் செய்திருக்கின்றார். இன்னும் இந்த மண்ணுக்கு நாங்கள் நிறைய அபிவிருத்திகளை செய்யவுமிருக்கின்றோம். நீங்கள் வாக்குப் போடாவிட்டாலும் அதாவுல்லா - அல்லாஹ்வின் அருளால் என்றும் வெற்றிபெறுவான். இனிமேல் வாக்குகள் போட வேறு கட்சியும், அபிவிருத்திகள் செய்ய அதாவுல்லாவும் என்ற நிலைப்பாட்டை நிறுத்திவிட்டு இந்தத் தவறுகளை தொடர்ந்தும் செய்யாமல் வெற்றியாளர்கள் பின் நின்று வெற்றிபெறுங்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொன்றைச் சொல்லி ஏமாற்றி உங்கள் வாக்குகளைப் பெறுகின்றது. அவர்கள் உங்களுக்காக செய்தது எதுவும் கிடையாது. அவர்கள் நமது பிரதேசத்திற்கு செய்தது ஒன்றைச் சொல்லுங்கள், ஒன்றுமே கிடையாது. இனியும் அவர்களது பொய்களுக்கு ஏமாற வேண்டாம்.

இறுதியாக சொல்கின்றேன்... கிழக்கு மாகாண சபையில் நானும் சகோதரர் றிசாட் பதியுதீனும் 06 ஆசனங்களை வைத்துக் கொண்டிருக்கின்றோம். இதனை அனைத்து தரப்பினருக்கும் ஞாபகம் செய்கின்றோம். சகோதரர் உதுமாலெப்பை அவர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுத்தால் பார்ப்போம் என்றார்கள். அல்ஹம்துலில்லாஹ் அவர் இன்று அமைச்சராகவிருக்கின்றார். இதுதான் தேசிய காங்கிரஸின் சாணக்கியம். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமான இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன. அதனை இவ்விடத்தில் நான் தவிர்த்துக் கொள்கின்றேன். நடந்தது என்ன என்ற உண்மையை மிக விரைவில் நாம் மூதூரில் இருந்து பொத்துவில் வரைக்கும் உலகறியச் சொல்லுவோம் என்று அமைச்சர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பொத்துவில் பிரதேச சபையின் தலைவர் முஹம்மட் வாசித், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினரும் அமைச்சரின் அமைப்பாளருமான ஏ.பதுர்கான் மற்றும் பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஏனைய உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர். (உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் ஊடகப் பிரிவு)



  Comments - 0

  • nawshad Monday, 01 October 2012 12:05 PM

    உங்கட காசிலயா செய்றியள்..?

    Reply : 0       0

    Reesath Tuesday, 02 October 2012 01:37 PM

    நவ்சாத் நீங்க ஒரு விசயத்த விளங்குங்க... இந்த மரக்காரர்கள் தற்பொழுது கைபொம்மைகள் ஆகவே... அதாவுல்லா அவர்களை விட மிகவும் நல்லவர். மேலும் அரசியல் வாதிகள் யாரும் சொந்தப் பணத்தில் உதவி செய்வது இல்லை...

    Reply : 0       0

    asmeer Wednesday, 03 October 2012 05:54 AM

    என்ன செய்தாலும் நன்றி கெட்டவன் மனிதன்...

    Reply : 0       0

    oruththan Friday, 05 October 2012 03:00 AM

    நாய் வாலை நிமிர்த்த முடியுமா நவ்சாத்?

    Reply : 0       0

    tariq Saturday, 06 October 2012 07:55 PM

    ஸ்ரீலங்கா மு.க. என்னத்த செஞ்சாங்க...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X