2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

தாதியர் தாக்கப்பட்டமையை கண்டித்து அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 06 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்பாக இன்று சனிக்கிழமை தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள், சிற்றுழியர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

தாதியர்களை நோயாளி ஒருவரின் உறவினர்கள் தாக்கியதை கண்டித்தே மேற்படி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வைத்தியசாலை முன்பாக பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் பிரதான வீதியில் பாதசாரிகளும் வாகனங்களும் வீதியால் செல்லமுடியாமல் 30 நிமிடங்களாக போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. பொலிஸாரின் தலையீட்டைத் தொடர்ந்து சுமார் 30 நிமிடங்களின் பின் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இது விடயமாக பதில் வைத்திய அத்தியட்சகர் எம்.எம்.எஸ்.ஜெஸீலுல் இலாஹி அவர்களிடம் வினவியபோது,

“நேற்று மாலை 5.10 மணியளவில் நோயாளி ஒருவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை அப்போது கடமையில் இருந்த தாதியர்கள், வைத்தியர்கள் செய்தனர். பின்னர் நோயாளி வாட்டுக்கு அனுமதிக்கப்பட்டு சில வினாடிகளில் அவருக்கு திடீரென ஏற்பட்ட வலியினால் அவதியுற்றபோது வைத்தியர்கள் துரிதமாக செயற்பட்டனர். ஆனாலும் சிகிச்சை பயனளிக்காமல் நோயாளி மரணமுற்றார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த மரணமானவரின் உறவினர்கள் கடமையில் இருந்த தாதி உத்தியோகத்தரை தாக்கியதுடன் வைத்தியர்களுக்கும் தகாத வார்த்தைகளால் ஏசியதுடன், மரணித்த உடலை சட்டவிரோதமாக எடுத்துச்செல்ல முற்பட்டனர். அதன்போது பொலிஸார் உட்பட காவலாளிகள் ஆகியோரையும் தாக்கிவிட்டு மரணித்தவரை பலாத்காரமாக எடுத்துச் சென்றனர்.

எடுத்துச் சென்ற மரணித்த உடலை கல்முனை பதில் நீதிவானின் உத்தரவின்படி அடக்கம் செய்யப்பட்டதாக அறிய முடிகிறது. ஆனால், இந்த மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் மரணித்தவரின் குடுமபத்திற்குள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்தது.

இதனால் சிலவேளைகளில் உறவினர்களாலேயே இவருக்கு ஏதாவது ஆபத்துக்கள் ஏற்பட்டதா? என்ற சந்தேகமும் எமக்கு ஏற்படுகிறது. ஆகவே இந்த மரணத்திற்கு சட்டப்படி சான்றிதழ்  வைத்தியசாலையால் வழங்கப்படாமல் எடுத்துச் சென்றது சட்டவிரோமான செயலாகும். இதனை ஐ.ஜீ.பி., பிரதம நீதிபதி, சுகாதார துறைக்கும் நாம் அறிவிக்க உள்ளோம்.

மேலும், கடமை நேரத்தில் எமக்கு எவ்வித நியாயமான காரணமுமின்றி தாக்கியமையால் இவ்வாறான நிகழ்வுகள் இனிமேலும் எமது வைத்தியசாலையில் நடைபெறக்கூடாது என்ற நோக்கோடு நாம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

உண்மையில் இங்குள்ள அரசியல் தலையீடுகள் காரணமாகவே கூடுதலான மனிதாபிமானமற்ற, நியாயமற்ற பிரச்சினைகள் ஏறபடுகின்றன. இந்த நிலை நீடிப்பதனால்தான் இங்கு விசேட நிபுணத்துவமுள்ள வைத்தியர்கள் சேவையாற்ற வருவதற்கு விருப்புவதில்லை. இதனால் பாதிக்கப்படப்போவது எமது பிரதேச மக்களே. இன்னும் இந்த பிரச்சினைகள் தொடராமல் இருக்கவேண்டும் என்பதற்காக நாம் இந்த தாக்குதலுடன் சம்மந்தப்பட்டோரை சட்டத்திற்கு முன்நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்றும் தொரிவித்தார்.



  Comments - 0

  • samalfasi Sunday, 07 October 2012 04:28 AM

    இப்போது எல்லாம் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் அகங்காரம் மேலோங்கியே இருக்கின்றது....படித்தவர்கள் தான் சமூகத்தின் காவலர்கள், தொண்டர்கள்... அதுவும் சேவை செய்ய வேண்டியவர்களே அசமந்த போக்கிலிருந்தும் . , ,ஒரு உயிரை காவு கொடுத்தும் இங்கு என்ன கூறவருகிறீர்கள்... ஒரு முஸ்லிமாக இருந்தும் இப்படியெல்லாம் பேச உங்களுக்கு எப்படி ஐயா???? !!!!, ஒரு உயிரோடு விளையாடிவிட்டு, முறையான சிகிச்சை அளிக்காமல் இருந்தவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளாமல், உயிரை பலிகொடுத்து ஏங்கியவனின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு எதிராவே சட்டம் பேசுகிறீர்களா ??? இப்படி பொறுப்பற்ற வைத்திய ஊழியர்கள், இவ்வாறான பிழையான வழி நடத்தும் பொறுப்பாளர்களால்தான் இன்று மக்களின் சேவையர்கள் மக்களுக்கே ஊறுவிளைவிப்பவர்களாக மாறியிருகிறார்கள்.

    Reply : 0       0

    Riyal - SMT Sunday, 07 October 2012 06:44 AM

    நீங்கள் செய்த தவறை மறைப்பதற்க்காக ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்...

    Reply : 0       0

    arham Monday, 08 October 2012 02:55 AM

    அப்படியென்றால் என்ன நடந்தது என்று உங்களுக்கு நன்றாக தெரியும் போல‌. கொஞ்சம் விளக்கி சொல்ல முயுமா சகோதரா?

    Reply : 0       0

    roofi Tuesday, 09 October 2012 07:54 AM

    ஓஓ சொல்ல முடியுமே, மெலே உங்கள் அத்தியட்சகர் சொல்லியிருப்பதை பாருங்கள். அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X