2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'சட்டம் நிலைநாட்டப்பட்டால் முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்'

Gavitha   / 2015 ஜனவரி 03 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

நாட்டில் சட்டமும் ஒழுங்கும் நிலை நாட்டப்பட்டு, நீதித்துறை சுயாதீனமாக செயற்படும் போதே முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது கடற்கரை பௌஸி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (02) நடாத்திய பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'மாவட்ட ரீதியிலும் தேசிய ரீதியிலும் முஸ்லிம்களுக்கு பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அவற்றுக்கு தீர்வு கண்டு எமது சமூகத்தின் ஒட்டு மொத்த அபிலாஷைகளையும் வென்றெடுக்க வேண்டிய தேவை எமக்கிருக்கிறது.

கடந்த சில வருடங்களாக இந்நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உயிர், உடமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள் குறி வைக்கப்படுகின்றன. மார்க்க உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பொருளாதார வளங்களை தாக்கியழிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த வன்முறைகள் அனைத்தும் பொது பல சேனா போன்ற பேரின தீவிரவாத இயக்கங்களினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. அதற்கு இந்த அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.

நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீரழிக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. இவை சரியாக இயங்குமானால் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

ஜாதிக ஹெல உறுமய கூட தமிழ், முஸ்லிம்களுக்கு எதிராக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டிருந்தன. ஆனால் பொது பல சேனா போன்று வன்முறைகளில் ஈடுபடவில்லை. ஜனநாயக ரீதியில்யே ஹெல உறுமயவின் பிரசாரங்கள் அமைந்திருந்தன.

சட்டம், ஒழுங்கு, நீதி என்பன நிலைநாட்டப்படுமானால், நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். அவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டால் தான் முஸ்லிம்களின் பாதுகாப்பும் உத்தரவாதப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இந்த அரசாங்கத்தினால் 18ஆவது திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டு 17ஆவது திருத்த சட்டம் இல்லாதொழிக்கப்பட்டதன் ஊடாக, சுயாதீன பொலிஸ், நீதி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுக்கள் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு, அவற்றின் அதிகாரங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் கைகளுக்கு மாற்றப்பட்டதன் விளைவையே நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

சில வாரங்களுக்கு முன்னர் எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் நாம் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, இவ்விடயத்தை நான் நேரடியாக ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினேன்.  

இன்று மைத்திரிபாலவின் கூட்டத்துக்கு கல்வீசி தாக்குதல் நடத்தப்படுகின்ற அளவுக்கு, நிலைமை மோசமடைந்துள்ளது. தான் வெல்ல வேண்டும் என்பதற்காக எதையும் செய்வதற்கு ஜனாதிபதி துணிந்து விட்டார்.

ஆனால் மக்கள் ஒன்று திரண்டால் ஜனாதிபதியின் சர்வதிகாரம் அதற்கு ஈடுகொடுக்காது என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன். மக்கள் புரட்சி குறித்து அவருக்கு இன்று பீதி ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி இன்று நிதானம் இழந்து பேசுகிறார். தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசை நம்பி ஆதரியுங்கள் என்று கூறும் அளவுக்கு அவரது நிலைமை மோசமடைந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மீதும் அவர் இன்று நம்பிக்கை இழந்துள்ளார். அதனால் 8ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கும் அவர் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

தான் தேர்தலில் தோல்வியுற்றால் தற்போதைய நாடாளுமன்றம் புதிய ஜனாதிபதியாக வரப்போகும் மைத்திரியின் பின்னால் சென்று விடும் என்றும் அதனால் சுதந்திரக் கட்சியைக் கூட பறி கொடுக்க நேரிடும் என்றும் 24 மணித்தியாலங்களுக்குள் 18 ஆவது திருத்த சட்டம் ரத்து செய்யப்பட்டு தான் இனி ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படும் என்றும் அவர் கடுமையாக அஞ்சுகின்றார். ஆகவே நாடாளுமன்றத்தை கலைப்பதைத் தவிர ஜனாதிபதிக்கு வேறு வலி கிடையாது.

முஸ்லிம்களுக்கு இழைத்த அநியாயம், அட்டூளியங்களுக்கான பிரதிபலனையே ஜனாதிபதி இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X