2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தேர்தல் நேர்மையாக நடைபெற்றது: உதுமாலெப்பை

Kogilavani   / 2015 ஜனவரி 09 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

'இலங்கை வரலாற்றில் ஜனநாயக ரீதியாக மிகவும் நேர்மையாக நடைபெற்ற ஒரு தேர்தலாக 7ஆவது ஜனாதிபதித் தேர்தலைக் கருதமுடியும்' என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக்கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

'ஏனைய தேர்தல்களைவிட் வன்முறைகள் குறைந்து, நீதியானதும், நேர்மையானதுமாக நடைபெற்ற தேர்தலாக இதனை கருதுகிறேன்.

ஜனநாயத்தை விரும்புகின்றவர்களினால் மாத்திரமே இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பதையும் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள மைத்திரிபால சிறிசேனவையும் அவரது தலைமையிலான அரசாங்கமும் இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லவற்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் வாழ்த்து தெரிவிக்கின்றேன்.

எமது தேசிய காங்கிஸின் தலைமைத்துவம் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் வழிகாட்டலில் நல்ல முடிவுகளை மேற்கொண்டு எமது அரசியல் பயணம் முன்னெடுக்கப்படும். மேலும் எமது ஆதரவாளர்கள், கட்சி பிரமுகர்கள் எமது கட்சியனதும்,
தலைமைத்துவத்தினதும் கொள்கையை ஏற்று எம்மோடு பக்கபலமாகவிருந்து வாக்களித்த அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துகொள்கிறேன்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அற்ப சொற்ப இலாபங்களுக்காகவோ அல்லது அரசியல் இலாபங்களுக்காகவோ தலைமைத்துவங்களுக்கு ஒரு போதும் நம்பிக்கை துரோகமோ, கழுத்தறுப்போ செய்துவிட்டு செல்ல மாட்டோம்' என்றார்.

முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் கருத்து தெரிவிக்கையில்,
'இந்த நாட்டின் சிறுபான்மையினருக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகவே பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை கருதுகின்றேன்.

மேலும் சிறுபான்மையினத்தை ஒதுக்கி தள்ளியவர்களுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்று ரீதியாக பேரினவாதிகளுக்கு நல்லதொரு பாடமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

இந்த வெற்றியின் மூலம் இலங்கையின் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலம் என்ன? என்பதை இந்த நாட்டுக்கும் பேரினவாத சக்திகளுக்கும் இந்தத் தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளது.

இன்று இந்த நாட்டின் மூவின சமூகங்களுக்குமான நல்லாட்சி ஏற்படுவதற்கான சூழ்நிலை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக பாடுபட்டுழைத்த அனைவருக்கும் வாக்களித்த மக்களுக்கும் மற்றும் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் அனைத்துக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அரசியல் வரலாற்றில் அராஜகமும், சர்வதிகாரமும் நிலைத்து நின்றதில்லை. அவைகள் அனைத்தும் மக்கள் சக்திகள் மூலம் உடைத்தெறியப்பட்டு நல்லாட்சிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மக்கள்பட்ட துன்பங்கள், விலையேற்றங்கள், வாழ்க்கைச் சுமைகள் என்பனவற்றுக்கு எதிர்வரும் அரசாங்கம் நல்ல தீர்வை வழங்க வேண்டும். அவ்வாறு சிறுபான்மை சமூகங்களை அரவனைத்து அனைவருக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இன்று மக்கள் இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்ததன் மூலம் நல்லதொரு எதிர்காலத்தை எதிர்பார்த்து நிற்கின்றனர்' என்றார்.

திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கருத்து தெரிவிக்கையில்,

'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நல்லாட்சியை தமிழர்கள் எதிர்வரும் காலங்களில் புரிந்து கொண்டு வேதனைப்படக் கூடிய காலம் மிக தூரத்திலில்லை.

பாராபட்சமற்ற முறையில் எந்தவித இனவேறுபாடோ, பிரதேசவாதமோ பாராது துரித அபிவிருத்தியை மேற்;கொண்டவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாகும். இதனால் இன்று கிராமங்கள் நகரங்களுடன் இணைக்கப்பட்டு அனைத்து துறைகளும் வளர்ச்சி கண்டு வருகின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பெறமுடியாதவற்றை பொது எதிரணியில் பெற்றுக்கொள்ள முடியும் என்று தமிழர்கள் நினைத்தால் வெறும் கனவாகவே அது அமையும். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் மறக்க முடியாத ஒரு தலைவராக மஹிந்த ராஜபக்ஷ திகழ்கின்றார்.

எது எப்படி இருந்தாலும் ஜனநாயக ரீதியில் மிகவும் நேர்மையான தேர்தல் நடத்தப்பட்டு புதிய தலைவர் ஒருவர் இந்நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் ஆட்சி மாற்றமொன்றை எதிர்பார்த்து பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிக்கு வாக்களித்துள்ளனர். அந்த வகையில் நல்லவிடயங்களையும் எதிர்கால தூரநோக்கான நன்மைகளையும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வழங்குவதற்கு ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும் என்று கூறி வாழ்த்து தெரிவிக்கின்றேன்' என்றார்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சரும் பொத்துவில் தொகுதி தமிழ் பிரதேசங்களுக்கான சுதந்திரக்கட்சி அமைப்பாளரமான ரீ.நவரெத்தினராஜா கருத்து தெரிவிக்கையில்,

நாட்டு மக்களின் ஜனநாயக ரீதியாக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தலைவணங்கி இந்த நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் சுதந்திரக்கட்சி பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதனையடுத்து மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதேவேளை இந்த நாட்டில் புரையோடிக்கிடந்த 30 வருடகால அராஜகத்தையும் வன்முறைகளையும் ஒழித்து நல்லாட்சிக்கான ஒரு தேசமாக மாற்றியமைத்த முன்னாள் ஜனாதிபதியை இந்நாடும், நாட்டு மக்களும் என்றும் மறந்து விடக்கூடாது. முன்னாள் ஜனாதிபதியினால் இந்நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவந்த நல்ல விடயங்களை புதிய தலைமை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
இந்த நாட்டில் இன நல்லுறவு, பொருளாதார அபிவிருத்தி, நல்லாட்சிக்கான முன்னெடுப்புகள் தொடங்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி, தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு எதிர்க்கட்சியினருடன் நட்புரீதியாக பேசி இந்த நாட்டை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு கூறியிருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியை காட்டுகின்றது.

இதேவேளை, புதிய தலைவர் மைத்திரிபால சிறிசேன இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் கட்சி பேதங்கள் பழிவாங்கல்களை கொள்ளாது அமைதியான முறையில் வெற்றிக்கழிப்பை முன்னெடுக்குமாறு வேண்டிக் கொண்டுள்ளமை அவரது நற்குணத்தின் வெளிப்படாகும்.

இதன்மூலம் இந்த நாட்டில் நல்லதொரு ஆட்சியை ஏற்படுத்தி கிழக்காசியாவிலேயே சிறந்ததொரு நாடாக கட்டியெழுப்புவதற்கு இன, மத, கட்சி வேறுபாடுகளை மறந்தது அனைவரும் கைகோர்த்து ஒற்றுமையாக செயல்படுவோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X