2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'இனவாதம், மதவாதத்துக்கு மக்கள் சாட்டையடி கொடுத்துள்ளனர்'

Thipaan   / 2015 ஜனவரி 11 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சி.அன்சார்


இந்த நாட்டில், இனவாதம், மதவாதம் என்பவற்றுக்;கு நடைபெற்ற முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மூலம் நாட்டு மக்கள் சாட்டையடி கொடுத்திருக்கின்றார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதான அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலி தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, சம்மாந்துறையிலுள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று சனிக்கிழமை(10) மாலை கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எதேச்சதிகாரத்தையும் இராணுவ அடக்குமுறை நிர்வாகத்தையும் ஊழல்கள் மலிந்த குடும்ப ஆட்சிமுறையையும் மக்கள் தூக்கியெறிந்திருக்கின்றார்கள்.

இதன் மூலம் ஜனநாயகத்தின் மீதான நமது நம்பிக்கையும் பற்றுதியையும் வெளிப்படுத்தி இந்த நாட்டின் ஜனநாயகத்தை மக்கள் நிலைநிறுத்தியிருக்கின்றார்கள்.

சிறுபான்மை இன மக்களின் அரசியல் நலன்களைப் புறந்தள்ளி ஆட்சி நடத்த முற்படுவர்கள் எத்தகைய அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும் அதற்கெல்லாம் தாங்கள் அஞ்சப்போவதில்லை என்பதனை இந்த தேர்தலில் மூலம் சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் உலகத்துக்கு காட்டியுள்ளனர்.

சர்வாதிகாரம், ஊழல்கள், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் போன்ற ஜனநாயக விரோத செயற்பாடுகளை நாட்டில் முற்றுமுழுதாக இல்லாதொழித்து சுபிட்சமும் இன ஐக்கியமும் நிறைந்த பலமிக்க தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகவே நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் பேதங்களை மறந்து ஓரணியில் நின்று மைத்திபால சிறிசேனவை வெற்றி பெறச்செய்துள்ளனர்.

சம்மாந்துறை தொகுதியிலுள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து 84 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பதிவுசெய்து பொதுவேட்பாளரை வெற்றிபெறந் செய்துள்ளனர்.

இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன். சம்மாந்துறையில், பொதுவேட்பாளரின் வெற்றிக்காக முதலில் ஐக்கிய தேசியக் கட்சியானது எனது தலைமையில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டதுடன் மக்கள் மத்தியில் அது தொடர்பான கட்டமைப்பையும் உருவாக்கியிருந்தது.

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி அலையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சம்மாந்துறை தொகுதி மக்களும் இணைந்து 46,827 வாக்குகளை அளித்து நல்லாட்சியின் பங்காராக ஆகியுள்ளமை வரலாற்று விடயமாகும்.

அரசியல் பேதம் இனவாதம் போன்றவற்றுக்கெல்லாம் அப்பால் நன்மைகளையும், தீமைகளையும் நாட்டு மக்கள் நன்கு சீர்தூக்கிப் பார்த்து நாட்டின் எதிர்கால சுபிட்சம் கருதி மைத்திரபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்தமை இந்நாட்டின் ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

எனவே, ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரசிங்க ஆகியோருக்கு இன மத பேதங்களின்றி அனைத்து தரப்பினரும் நாட்டின் சுபிட்சம் கருதி ஆதரவை தொடந்தும் வழங்குவது அவசியமாகும் என்றார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X