2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'கி.மா சபை அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது'

Thipaan   / 2015 ஜனவரி 18 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


2015ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுதிட்டத்துக்கான அங்கிகாரம் கிழக்கு மாகாண சபையினால் இதுவரை வழங்கப்படாதால் கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைசர் எம்.எஸ். உதுமாலெப்பை, இன்று ஞாயிற்றுக்கிழமை (18)  தெரிவித்தார்.
அவர் வெளிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2015 ஆண்டின் வரவு- செலவுத்திட்டத்துக்கான அங்கிகாரம் வழங்கப்படாமையினால் சம்பளத்தையும், ஏனைய கொடுப்பனவுகளையும் நம்பி வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களும் ஏனைய வருமானம் பெற்றுவருவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் தாமதிக்காது கிழக்கு மாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்துக்கான அங்கிகாரத்தை கிழக்கு மாகாண சபை வழங்குவதற்கான நடவடிக்கையை உடன் மேற்கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் மாகாண சபையின் அங்கிகாரத்திற்காக முதலமைச்சரினால் கடந்த டிசெம்பர் மாதம் 01ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன.

முஸ்லிம் காங்கிரஸின் குழுத் தலைவர் ஜெமீல், மாகாண சபை உறுப்பினர் தவம் ஆகியோர்  விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2015ஆம் ஆண்டின் வரவு-செலவு திட்டத்துக்கான வாக்கெடுப்பின் போது முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரித்துவாக்களிப்பதாக இச்சபையில் தெரிவித்தனர்.

2015ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்ட  வாக்கெடுப்பு நடைபெறவிருந்த இறுதி வேளையில் முஸ்லிம் காங்கிரஸின் குழுத் தலைவர் ஜெமீல், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் ஆகியோர் தவிசாளரையும், முதலமைச்சரையும் அழைத்து வாக்கெடுப்பு நடாத்துவதற்கு இரண்டு வாரகால அவகாசம் தேவை எனக் கோரினர்.
 
இதன் பின் சபை நடவடிக்கை  ஒத்திவைக்கப்பட்டது. இதனால் கடந்த ஆறு வருடகாலமாக கிழக்கு மாகாண  சபையின் வரவு-செலவுதிட்டத்தினை ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதத்துக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டு அங்கிகாரம் வழங்கிய சம்பிரதாயம் இல்லாமல் செய்யப்பட்டு 2015 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 12 ஆம் திகதி முடிந்தும் இதுவரை வரவு-செலவுதிட்டத்துக்கான அங்கிகாரம் கிழக்கு மாகாண சபையால் வழங்காமல் இருப்பது வேதனைப்பட வேண்டிய விடயமாகும்.

இறுதியாக நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி அன்றைய சபை அமர்வின் போது 2015ஆம் ஆண்டிற்கான வரவு–செலவு திட்ட அங்கிகாரத்தினை வழங்கி அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம், ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கிழக்கு மாகாண சபையில் பெரும்பான்மை பெற்றவர்கள் மாகாண சபையின் அதிகாரத்தை உத்தியோகபூர்வமாக பெற்றதும்; 2015ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுதிட்டத்தில் ஏதாவது திருத்தங்கள் செய்ய வேண்டு மென்றால் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனகேட்டுக் கொண்டோம்.

தமிழத்; தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் புதிய முதலமைச்சர், அமைச்சர்கள் கிழக்கு மாகாண சபையின் நிருவாகத்தினை பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறி எதிர்வரும் 20ஆம்; திகதிவரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு கட்சிதலைவர்களின் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்தகோரிக்கையை எல்லா கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டு எதிர்வரும் 20 ஆம்; திகதிவரை கிழக்கு மாகாண சபைக் கூட்டத்தை ஒத்திவைப்பதாக தீர்மானித்தனர்.

நமது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சி பெரும்பான்மை இழந்துள்ளது. கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தினை பெரும்பான்மை பெற்றவர்களிடம் கையளிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.

அதிகாரங்களை முறைப்படி பெறுவதற்கு காலஅவகாசம் கேட்டுள்ளனர். தாமதிக்காது கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தை பெற்று விரைவில் வரவு–செலவுதிட்டத்தை கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பித்து அரச அதிகாரிகளின் சம்பளங்களையும் கொடுப்பனவுகளையும் வழங்குவதற்கான  ஏற்பாடுகளை புதிதாக நியமிக்கப்படவுள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

கிழக்குமாகாணசபையில் கடந்தகாலங்களில் ஆளும் கட்சி, எதிர் கட்சி என்ற பேதமில்லாமல் பணிபுரிந்துள்ளோம். நாம் எதிர்காலத்தில் எதிர்க்கட்சியில் அங்கம் வகித்தாலும் ஆளும் கட்சியின் நல்ல நடவடிக்கைகளுக்கு கிழக்கு மாகாணமக்களுக்காக என்றும் ஒத்துழைப்புவழங்குவோம் எனக் குறிப்பிட்டார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X