2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கிழக்கு மாகாணத்துக்கு தமிழரே முதலமைச்சராக வேண்டும்: கலையரசன்

Gavitha   / 2015 ஜனவரி 19 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகராசா சரவணன்

கிழக்கு மாகாணத்துக்கு தமிழரொருவர்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்பதில்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் உறுதியாக இருக்கின்றது.

கிழக்கு மாகாணசபையில் 11 உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, முதலமைச்சர் ஒருவரை கேட்பது நியாயமானது. ஆனால் 7 உறுப்பினர்களைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சரொருவரை கேட்பது எந்த விதத்தில் நியாயமானது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் யுத்ததினால் அங்கங்களை இழந்து, குடும்பங்களை இழந்து வாழ்வாதாரத்தை கொண்டு செல்லமுடியாமல் வாழ்வோருக்கு நிதிவழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (18) ஆலயடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
சுவிற்சலாந்து தமிழர் இந்து கலாச்சார ஒன்றியத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வின் முதற்கட்டமாக, தெரிவு செய்யப்பட்ட 12 பேருக்கு, தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 3 இலட்சம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் க.இரத்தினவேல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

' இந்நாட்டில் பல காலமாக தமிழ்மக்கள் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். தாய், தந்தை மற்றும் சகோதரர்களை இழந்தது மட்டுமல்லாது உடல் அங்கங்களையும் இழந்து, வாழமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் கவனிப்பாறற்ற முறையிலே இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எந்த வித நிவாரணமும் வழங்கப்படாதிருப்பது ஒரு குறையாகவே இருந்துகொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலமையை போக்கவேண்டும் என்பதற்காக, புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்கள் மூலம் முதல் கட்டமாக நிதி வழங்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

ஜனாதிபதி தேர்தலில் மாற்றமொன்று ஏற்பட்டவுடன் கிழக்கு மாகாணசபையை தமிழர்கள் ஆளக்கூடிய சாதாரண நிலமை ஏற்பட்டிருக்கின்றது. 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தலில் த.தே.கூ. 11 உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 உறுப்பினர்களையும் பெற்றிருந்தது. அந்த காலகட்டத்தில் த.தே.கூ. தலைவர் சம்மந்தன், மு.கா.வுக்கு அழைப்பு விடுத்திருந்தார். தமிழ்பேசும் சிறுபான்மை சமூகங்களாக இருக்கும் நமது இரு சமூகங்களும் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரங்களை பிடிக்கவேண்டும் என்ற கருத்தையும் கூறியிருந்தார்.

அது மாத்திரமல்லாது, முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் இருந்தால் பரவாயில்லை என்றும் ஏனைய அமைச்சுப் பதவிகளையும் மு.கா.வுக்கு கொடுத்து, மாகாண சபையை அமைக்கவேண்டும் என்கின்ற முயற்சியிலே பல முன்னெடுப்புக்களை முன்னெடுத்திருந்தார். இப்போது இவ்வாறான விடயங்களுக்கு மு.கா. செவிசாய்க்காமல் சுயலாபங்களுக்காக அரசோடு ஒட்டிக்கொண்டு, இம்மாகாண சபையை அவர்கள் வசமாக்கியுள்ளது.

அப்பொழுது திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். அதேபோல, வழங்கப்பட்ட நியமனங்கள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது. அந்த விடயத்தில் தமிழர்களாகிய நாம் பாதிக்கப்பட்டோம். ஒவ்வொரு விடயத்திலும் அநீதிகள் மேலோங்கின.
ஆனால், இம்மாற்றத்தின் பிறகு, தற்போது த.தே.கூ. ஆட்சி அமைக்கக்கூடய சூழ்நிலை இருக்கின்ற இந்த காலகட்டத்தில், கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக முஸ்லிம் வரவேண்டும் என்று மு.கா. கூறுகின்றது. ஆனால் தமிழரொருவர் முதலமைச்சராக இருக்கவேண்டும் என எமது தலைமைகள் உறுதியாக இருக்கின்றார்கள்.

இருப்பினும் தமிழர் ஒருவர் முதலமைச்சராகவும் ஏனைய அமைச்சு பதவிகள் முஸ்லிம்களை உள்ளடக்கி மாகாண சபை அமைக்கவேண்டும் என்ற விடயம் தொடர்பாக, கடந்த சில தினங்களாக பல சுற்றுப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் எதுவுமே வெற்றியளிக்கவில்லை.

எனவே, தமிழரை தவிர வேறொருவர் கிழக்கு மாகாண முதலமைச்சராக வரமுடியாது என்று சிறுபான்மை சமூகங்களின் விடுதலைக்காக பாடுபடுகின்ற த.தே.கூ. உறுதியாக இருக்கின்றது' என்று தெரிவித்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X