2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தற்போதைய கல்வி கொள்கையின் காரணமாகவே மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுகின்றனர்: உதுமாலெப்பை

Sudharshini   / 2015 ஜனவரி 27 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா


தற்கால கல்விக் கொள்கையின் காரணமாகவே மாணவர்கள், கல்வியைப் பெற்றுக்கொள்வதில் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.


அட்டாளைச்சேனை அந்-நூர் வித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை(27) இடம்பெற்ற வித்தியாரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,


அக்காலத்தில்; பாடசாலைக்கு செல்வதென்றால் பெரும் அச்சத்துடன் ஒரு பொலிஸ் நிலையத்துக்கு செல்லும் பயந்த மனநிலையுடனேயே மாணவர்களாகிய நாம் சென்றிருந்தோம். காரணம் அவ்வாறுதான் மாணவர்கள் அடக்கி ஆளப்பட்டார்கள், மேலும், தண்டனை முறைகள், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் அனைத்தும் பயங்கரமான முறையிலேயே இருந்தன.


ஆனால் இன்று அவ்வாறான நிலை இல்லை. ஆசிரியர்களும் பாடசாலை சமூகமும் நட்புறவுடன் மாணவர்களை வரவேற்கும் முறையும் மற்றும் பாடசாலை சூழல் அமைக்கப்பட்டுள்ள விதமும், தமது வீட்டைவிட பாடசாலையை நேசிக்கும் அளவுக்கு மாணவர்களின் மனநிலை மாற்றமடையச் செய்கின்றது.


மேலும், போதுமான அளவுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நியமனங்களும் பௌதிக வள அபிவிருத்திகளும் எல்லாப் பிரதேசங்களுக்கும் செய்யப்பட்டுள்ளன. நகர்புற பாடசாலைகளைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் கிராமப்புற மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.


அந்த வகையில் இலவசக் கல்வியை ஏற்படுத்தி தந்த எமது அரசியல் தலைவர்களின் சேவைகளை நாம் என்றும் மறந்து செயற்படக் கூடாது. அவ்வாறுதான் பல்வேறு பிரச்சினைகளுக்கும் மத்தியில் அரசாங்கம் கல்விக்காக பெருமளவிலான நிதியொதுக்கீடுகளையும் கல்வியில் பாரிய வளர்ச்சியினையும் ஏற்படுத்தி வருகின்றது.


எனவேதான், பாடசாலை சமூகம் நல்லொழுக்கமுள்ள, சிறந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும். தாம்பெற்ற கல்வியின் ஊடாக தனது தாய் நாட்டுக்கும் தனது பிரதேசத்துக்கும் சமூகத்துக்கும் சிறந்த பிரதி பலன்களை வழங்கக் கூடிய நல்லதொரு மாணவ சமூதாயத்தை உருவாக்குதன் மூலமே, நிலையான அபிவிருத்தியையும் சமாதானத்தையும் ஒருமைப்பாட்டையும் இந்த நாட்டில் நிலை நாட்ட முடியும்.


தற்போதுள்ள ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்தினை முறையாகப் பயன்படுத்தி கல்விக்கும் பிரதேசத்திற்குமான அபிவிருத்திகளை, திட்டமிட்ட முறையில் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்வதுக்கு முயற்சிக்க வேண்டும்.


பாடசாலை அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.காசீம், ஆசிரிய ஆலோசகர்களான யூ.எம். நியாஸி, எஸ்.எல்.மன்சூர். எம்.ஏ. சவுறுதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X