2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'ரவூப், ஹக்கீமை நம்பி பிரதிநிதித்துவத்தை இழக்க முடியாது'

Kogilavani   / 2015 பெப்ரவரி 15 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.சி.அன்சார்


'ரவூப் ஹக்கீம், அதாவுல்லா போன்ற தலைவர்களை இனியும் நம்பி எமக்கான பிரதிநிதித்துவத்தை இழக்க முடியாது. எப்பாடுப்பட்டாவது இம்முறை எமது பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரே வழி சுயேட்சை குழுவை ஆதரிப்பதன் மூலம்தான் எமது இலக்கை அடைய முடியும்' என அம்பாறை மாவட்ட ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் செயற்திட்ட உத்தியோகத்தர் எம்.எம்.எம்.நௌஷாத் தெரிவித்தார்.


'கடந்த ஒரு  சாப்த  காலமாக,  சம்மாந்துறைத் தொகுதி இழந்து நிற்கின்ற நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெற வேண்டுமாயின் அனைவரையும் உள்ளிடக்கிய சுயேட்சைக் குழுவென்றை மக்கள்முன் கொண்டு வருவதன் மூலமே இலகுவாக பெற்றுக் கொள்ளலாம்' என்றும் அவர் தெரிவித்தார்.


எதிர்வரும் பொதுத்தேர்தலில் எவ்வாறு சம்மாந்துறைத் தொகுதிக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றிய உலமாக்கள், ஊர்பிரமுகவர்கள், சமூகநல அமைப்புக்களின் பிரதிநிதிகளுடான கலந்துரையாடல் சனிக்கிழமை(14) சம்மாந்துறை விஷவைத்தியர் வீதியிலுள்ள நௌஷாத்தின் இல்லத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,


'சம்மாந்துறைத் தொகுதியில் 2014ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படி 81ஆயிரத்துக்கும்; மேற்பட்ட வாக்குகள் காணப்படுகின்றன. அதிலும் 41ஆயிரம் வாக்குகளைக் கொண்ட சம்மாந்துறை பிரதேசத்தில் திறமையான 10 வேட்பாளர்களை உள்ளடக்கிய சுயேட்சைக் குழுவொன்றை போட்டியிடச் செய்து குறைந்தது 25 ஆயிரம் வாக்குகளை பெறுவதன் மூலம் கடந்த 10 வருடகாலமாக இழந்து நிற்கின்ற எமது மண்ணுக்கு உரித்தான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளலாம்.


இதனை முஸ்லிம் காங்கிரஸின் மூலமாகவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் மூலமாகவோ சுதந்திரக் கட்சியின் மூலமாகவோ பெற்றுக் கொள்ள முடியாது. கட்சிகளின் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற வேண்டுமாயின் நாம் 40ஆயிரத்துக்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளை பெறவேண்டும்.


கடந்த 40 வருடங்களாக நாடாளுமன்ற பிரதிநிதித்துத்தை தக்க வைத்த சம்மாந்துறை மண், கடந்த 2004, 2010 ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் நமது மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டதன் காரணமாக பிரதிநிதித்துவத்தை இழந்து அரசியல் அநாதைகளாக காணப்படுகின்றது.


முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நமது மண்ணுக்கு தேசியப்பட்டியல் மூலம் பிரதிநிதித்துவத்தை தருவதாக கூறி நமது மக்களையும் மண்ணையும் ஏமாற்றி வந்தார்.


எதிர்வரும் பொதுத்தேர்தலானது ஒரு தேசிய அரசுக்குப் பின்பு உதயமாகின்ற கௌரவமான நாடாளுமன்றத்தை உருவாக்குவதாக இருக்கும். அவ்வாறு அமையவுள்ள பொதுத்தேர்தலில் சம்மாந்துறைக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.


எமது 41 ஆயிரம் வாக்குகளில் வெறும் 25 ஆயிரம் வாக்குகளை சுயேட்சைக்குழுவுக்கு வாக்களிப்பதன் மூலம் ஜனநாயக முறையில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இலகுவாக பெறமுடியும்.


எனவே, எமது வேலைத்திட்டத்துக்கு சம்மாந்துறையின் உயர்சபைகளான நமபிக்கையாளர் சபை, மஜ்லிஸ் அஷ்ஷீறா, உலமா சபை, பள்ளிவாசல் நிர்வாகிகள், சமூக சேவை அமைப்புக்கள் உட்பட அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும' என தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் உலமாக்கள், ஊர்பிரமுகவர்கள், சமூகநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X