2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தமிழ் கலாசார மண்டப நிர்மாண பிரச்சினைக்கு தீர்வு

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா
 
கல்முனை நகரில் தமிழ் கலாசார மண்டபம் நிர்மாணிப்பது தொடர்பில் நீண்ட காலமாக இருந்து வருகின்ற இழுபறியை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
கல்முனை மாநகர முதல்வருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இப்பிரச்சினை தொடர்பில் சமரசப் பேச்சு இடம்பெற்றதன் பயனாக இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
 
கல்முனைத் தொகுதி தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாக கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ராஜேஸ்வரன் தலைமையிலான குழுவினர் கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பரை சனிக்கிழமை (14) சந்தித்து கலந்துரையாடினர்.
 
கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கல்முனை மாநகரசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான ஏ.அமிர்தலிங்கம், எஸ்.ஜெயக்குமார், வி.கமலதாசன், ஏ.விஜயரட்ணம் உட்பட தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
 
கல்முனை தமிழ் பிரதேசங்களில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திப் பணிகள் மற்றும் அப்பிரதேசங்களில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் இச்சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது சில பிரச்சினைகளுக்கு முதல்வர் நிஸாம் காரியப்பர் உடனடித் தீர்வுகளை வழங்கியதுடன் சில பிரச்சனைகளை தீர்ப்பதற்கு காலப்போக்கில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
 
அதேவேளை, கல்முனை மாநகர தமிழர்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற தமிழ் கலாசார மண்டபத்திற்கான வரைபடத்துக்கு அனுமதி வழங்குவதில் இருந்து வருகின்ற தடைகளை நிவர்த்தி செய்வது குறித்தும் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டது. இதற்கு வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாநகர சபை என்பவற்றின் அதிகாரிகளுக்கு முதல்வர் பணிப்புரை விடுத்தார்.
 
இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை அலுவலகப் பொறுப்பாளர் திருமதி ஜே.தியாகராஜா, தொழில் நுட்ப உத்தியோகத்தர் எம்.சி.எம்.சி.முனீர், முதல்வரின் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர், பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் உட்பட மற்றும் பல அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X