2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கிழக்கில் தேசிய அரசாங்கம் உருவாக வேண்டும்: சம்சுடீன்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாண மக்கள் பாகுபாடின்றி பயன்பெற வேண்டுமாயின்; கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கம் உருவாவது அவசியம் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மூவின மக்களும் வாழ்கின்றதொரு மாகாணமே கிழக்கு மாகாணமாகும். இம்மாகாணத்தில் வாழுகின்ற மக்கள் பகைமையையும் பழையவைகளையும் மறந்து வாழ முயற்சித்து வருகின்றனர்.

ஆனால், அரசியல் நலன்களுக்காக சிலர் இம்மாகாண மக்களின் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில் அறிக்கைகளை விடுகின்றனர். இவ்வறிக்கைகள்; எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போன்று அமைகிறது. கிழக்கு மகாணத்தில் வாழுகின்ற மக்களுக்கு கிழக்கு மாகாண சபையினூடாக நன்மைகள் போய்ச் சேர வேண்டும்.

இந்நன்மைகளில் பாகுபாடு காட்டப்படக் கூடாது. ஆனால், கடந்த காலங்களில் பாகுபாடு காட்டப்பட்டதாக ஒரு சிலரினால் கூறப்பட்டு வருகிறது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பது வாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்டதாக உள்ளது.

இருப்பினும், சலக மக்களினதும் அபிலாஷைகள் இம்மாகாண சபையின் ஆட்சி அதிகாரங்களினூடாக நிறைவேற்றப்பட வேண்டுமாயின் இம்மாகாணத்தில் வாழும் மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் இம்மாகாணத்தின் ஆட்சி அதிகாரங்களில் பங்குகொள்வது முக்கியத்துவமிக்கது.

அது மக்களுக்கு நன்மை செய்வதாக அமையும். மக்களிடையே ஐக்கியம் ஏற்பட வேண்டுமாயின் கட்சிகளின் பிரதிநிதிகளிடையேயும் ஐக்கியம் மலர வேண்டும். அந்த ஐக்கியம் தேசிய அரசாங்கம் ஒன்றை கிழக்கு மாகாண சபையில் உருவாக்க வழிகோல வேண்டும்.

அந்த ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான அழைப்பு முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று சகல கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஆட்சி அதிகாரம் கொண்ட மகாகாண சபை ஆட்சி கிழக்கில் உதயமாக வேண்டும். அதற்காக சகல தரப்பினரும் முன்வருவார்கள் என நம்புகின்றேன்.

கிழக்கு மகாணத்தின் மூன்றாவது முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். இம்முதலமைச்சரின் தலைமையின் கீழ் இனப்பாகுபாடின்றி சகல மக்களுக்கும் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தினூடாக சேவைகள் இடம்பெறுமென்ற நம்பிக்கை மலர்ந்துள்ளது. அந்த நம்பிக்கையை உறுதிய செய்யும் வகையில் முதலமைச்சரின் கருத்துக்களும் காணப்படுகின்றன.

அரசியல் அதிகாரமும் நிர்வாகப் பணிகளும்; ஒன்றாகப் பயணிக்கும்போதுதான் நமது மக்களுக்கான சேவையை வெற்றிமிக்கதாக ஆக்கின் கொள்ள முடியும். அந்தவகையில், புதிய முதலமைச்சருக்கு ஒத்துழைத்து வழங்கி இம்மாகாண மக்களுக்கான பணிகளைப் புரிய நான் உறுதி பூண்டுள்ளதுடன் சகல நிர்வாக உத்தியயோகஸ்தர்களும் இன, பிரதேச, மொழி வேறுபாடுகளை மறந்து முதலமைச்சரின் மக்கள் நலன்சார் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகின்றேன்.

அத்துடன்;, சகல மாகாண சபை உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை மறந்து மக்கள் நலன்களுக்காகவும் மாகாணத்தின் வளர்ச்சிக்காகவும் ஐக்கியப்பட்டு தேசிய அரசாங்கமொன்று கிழக்கில் உருவாக்க தங்களது பங்களிப்பை வழங்க முன்வர வேண்டுமென்று வேண்டிக்கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X