2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தேசிய விவசாயக் கல்லூரியை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை

Kogilavani   / 2015 மார்ச் 24 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பாலமுனை விவசாயப் பயிற்சி நிலையத்தில் தேசிய தொழில் முயற்சித் தகைமை – 5ஆம் மட்டக் (என்.ரி.கியு – 5) கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தேசிய விவசாயக் கல்லூரியை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அம்பாறை மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்தார்.

மேற்படி பயிற்சி நெறி தொடர்பிலும் விவசாய கல்லூரியை உருவாக்குவது தொடர்பிலும் ஆராயும் விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (23) பாலமுனை மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'விவசாய அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்களத்தின் அனுமதியுடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தேசிய தொழில் முயற்சித் தகைமை - 5ம் மட்டக் கற்கை நெறிக்கு 40 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. ஒருவருட தமிழ்மொழி மூல டிப்ளோமாக் கற்கை நெறியாக நடைபெறவுள்ள இக்கற்கைநெறி பாலமுனை மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி நெறியை நிறைவுசெய்பவர்களுக்கு பயிற்சியின் முடிவில் விவசாயத் திணைக்களத்திலேயே நேரடியாக தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.

மேலும், 'ஆரம்பத்தில் ஒரு வருட கற்கை நெறியாக ஆரம்பிக்கப்படவுள்ள இக்கற்கை நெறி பின்னர், குண்டசாலையிலுள்ள தேசிய விவசாயக் கல்லூரி போன்று பாலமுனையிலும் நிச்சயமாக ஒரு தேசிய விவசாயப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு, இங்கு இரண்டு வருடங்களைக் கொண்ட டிப்ளோமாக் கற்கை நெறிகள் நடாத்தப்படும்.

இங்கு தேசிய டிப்ளோமா தொழில்நுட்ப பாடநெறி நடத்தப்படவுள்ளதுடன், இதன் பின்னர் விவசாயப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

இவ்விவசாயக் கல்லூரி கிழக்கு மாகாணத்திலேயே முதலாவது விவசாயக் கல்லூரியாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்மூலம் அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்மொழி பேசும் இளைஞர், யுவதிகள் எதிர்காலத்தில் அதிக நன்மை பெறக்கூடியதாக இருக்கும்.

இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செயற்படுத்துவதற்கு இப்பிரதேச மக்கள் தங்களது பங்களிப்புக்களை வழங்க வேண்டும்' என அவர் இதன்போது கேட்டுகொண்டார்.

தற்போது இப்பயிற்சி நெறியை ஆரம்பிப்பதற்கான அடிப்படை வசதிகள் நிறைவு செய்யப்படாமல் இருப்பதனால் அதுதொடர்பான தேவைகளை நிறைவு செய்யும் வகையிலேயே இக்கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X