2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஆலையடிவேம்பில் 25 டெங்கு நோயாளர்கள்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 25 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை,  ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பெப்ரவரி மாதம்வரையான காலப்பகுதியில் 25 பேர் டெங்கு நோய்க்கு உள்ளாகியதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய பணிப்பாளர் வைத்தியர் முனவ்வர்  தெரிவித்தார்.  

அத்துடன், கடந்த வருடத்தின்; ஒக்டோபர்  மாதத்திலிருந்து   டிசெம்பர் மாதம்வரை 45  பேர் டெங்கு நோய்க்கு உள்ளாகியிருந்ததாகவும் அவர் கூறினார்.

2015ஆம் ஆண்டின் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு முதலாவது வாரத்தையிட்டு ஆலையடிவேம்பு பிரதேசத்தில்  'நுளம்புகளை  இல்லாது ஒழிப்பது' எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல், அப்பிரதேச சுகாதாரப் பணிமனை கேட்போர்கூடத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

'இலங்கையின் காலநிலைக்கு ஏற்ப மழை வீழ்ச்சியின்போது, நுளம்புகளின் பெருக்கமும் டெங்கு நுளம்புகளின் தாக்கமும் ஏற்படுகின்றன.  தற்போது வட, கிழக்கில் வெப்பமான  காலநிலை நிலவுவதுடன்,  ஏனைய பகுதிகளில் மழை வீழ்ச்சி இடம்பெறுவது வழக்கம்.  

சுகாதாரப் பணியகம் இந்த ஆண்டில் தேசிய முதலாவது நுளம்புக் கட்டுப்பாட்டு வாரமாக 26ஆம் திகதி தொடக்கம் முதலாம் திகதிவரை அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்தப்  பிரதேசத்தில் தற்போது சிரமதானப் பணிகளை மேற்கொள்ளுவதன் மூலம் நுளம்புகளை ஒழிக்கமுடியும். அனைவரும் பிரதேசத்தையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்க பாடுபடவேண்டும்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலப்பிரிவில் 8ஆம் பிரிவு தொடக்கம் 9ஆம் பிரிவு,  7ஆம் பிரிவு தொடக்கம் 7/4 பிரிவுவரையும் 26ஆம் திகதி சிரமதானம் மேற்கொள்ளப்படவுள்ளது. 29ஆம் திகதி பிரதான வீதிகள், வடிகான்கள், மயானங்;கள் போன்றவற்றில் சிரமதானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

கண்ணகிபுரம், பனங்காடு, அளிக்கம்பை போன்ற பிரதேசங்களில் 30ஆம் திகதி சிரமதானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
முதலாம் திகதி சிரமதானத்தின் மதிப்பீடும் அவதானிப்பும் முன்னெடுக்கப்படும். பிரதேசத்திலுள்ள 13 பாடசாலைகளில்  விழிப்புணர்வு பிரசாரம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X