2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சாய்ந்தமருதை உள்ளூராட்சி மன்றமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு மகஜர்

Thipaan   / 2015 மார்ச் 31 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

சாய்ந்தமருதை உள்ளூராட்சி மன்றமாக பிரகடனப்படுத்துமாறு கோரி,  கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, நேற்று திங்கட்கிழமை(30) மகஜர் அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  முன்னெடுக்கப்பட்டுவரும் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருதை உள்ளூராட்சி மன்றமாக பிரகடனப்படுத்துமாறு மீராசாஹிப், தனது மகஜரில் கோரியுள்ளார்.
 
இது தொடர்பில் சிராஸ் மீராசாஹிப் கருத்துத் தெரிவிக்கையில்,

சாய்ந்தமருது வாழ் மக்களின் நீண்ட நாள் அரசியல் அபிலாஷையான தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையினை வென்றெடுக்க, சாய்ந்தமருது மக்களின் துணையோடு பல்வேறு பிரயத்தனங்களை நான் மேற்கொண்டேன்.

எனது முயற்சி கைகூடி வந்த தருணத்தில், காழ்ப்புணர்ச்சி கொண்ட வங்குரோத்து அரசியல் வாதிகளினால் முட்டுக்கட்டை போடப்பட்டது.

இதனால் மலரவிருந்த உள்ளூராட்சிமன்றம் இறுதி வினாடிகளில் கைநழுவியமையை யாவரும் அறிவீர்கள்.
 
சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முனையாது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கைக்கு அன்று தடைகளை ஏற்படுத்தியவர்கள், இன்று அக்கோரிக்கைக்காக தங்களால் முடியுமான முயற்சிகளை முன்னெடுப்பதாக தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருந்தாலும் அது உணர்வுபூர்வமானதாக அமைய வேண்டும் என இறைவனைப் பிராத்திக்றேன்.

சாய்ந்தமருது பள்ளிவாசல் இக்கோரிக்கை தொடர்பில் அக்கறை எடுத்திருப்பது மிக மன மகிழ்வினை ஏற்படுத்துகின்றது.

எதிர்காலத்தில், இக்கோரிக்கைக்காக கட்சி பேதமின்றி எவ்வித எதிர்பார்ப்புகளுக்கும் அப்பால் நின்று கைகூடிவருகின்ற தருணத்தில் தடை ஏற்படுத்தாது ஒற்றுமையுடன் ஒருமித்து செயற்படவேண்டும்.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  நல்லாட்சியில் முன்னெடுக்கப்படுகின்ற 100 நாட்கள் வேலைத்திட்டத்தில், சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள் கனவான, உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையினை நனவாக்குமாறு, சாய்ந்தமருது மக்கள் சார்பில் ஜனாதிபதிக்கு இக்கோரிக்கையினை நான் இன்றைய தினம் அனுப்பிவைத்துள்ளேன்.

அத்தோடு இதற்கு உறுதுணை வழங்குமாறு பல்வேறு அரசியல் தலைமைகளையும் வேண்டியிருப்பதோடு அதற்கான சந்திப்புக்களையும் மேற்கொண்டுள்ளேன்.

அவை அனைத்தும் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்த ஒவ்வொரு சாய்ந்தமருது பிரஜையும் இறைவனிடம் கையேந்த கடமைப்பட்டுள்ளீர்கள்.

என்றும் என் இதயத்தில் குடியிருக்கின்ற மக்களின் நலனுக்காய் என் இதயத்தில் துடிப்பிருக்கும் வரை அச்சாணியாய் செயற்படுவேன் எனத் தெரிவித்தார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X