2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அரபுக்கல்லூரி மாணவர்களினது பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவு

Princiya Dixci   / 2015 மார்ச் 31 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை, கிழக்கிலங்கை அரபுக்கல்லூரி மாணவர்களினது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாடிக்கட்டடத்தினது பாதுகாப்பு முறைமையினை மேற்கொள்ளுமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய எச்.எம்.எம்.பஸீல், செவ்வாய்க்கிழமை (31) கல்லூரி நிருவாகத்துக்கு உத்தரவிட்டார்.

இக்கல்லூரியின் 03ஆவது மாடியிலிருந்து விழுந்து, 03ஆம் வருட மாணவன் ஜே.றவூஸ்டீன், (வயது 16) கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி உயிரிழந்தார்.

இச்சம்பவத்தை அடுத்து, அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இக்கல்லூரியின் மாடிக்கட்டடத்தின் வெளிப்பகுதி மாணவர்களின் பாதுகாப்புக்கு உகந்ததாக அமைந்திராமை குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய எச்.எம்.எம்.பஸீல், இன்று (31) கல்லூரியின் கட்டட  நிலைமையினை சென்று பார்வையிட்டார்.

இதன்போது கல்லூரியின் அதிபர் எம்.எல்.அப்துல் லத்தீப் மௌலவி மற்றும் கல்லூரி நிருவாகத்தின் செயலாளர் யூ.எல். நியாஸி மௌலவி உள்ளிட்ட குழுவினரும் குறித்த இடத்துக்கு பிரஸ்தாபித்திருந்தனர்.

கல்லூரியின் 03 மாடிகளையும் விடுதிகளையும் அதன் உள், வெளிப்புற சுற்றுச்சூழலையும் நீதிபதி பார்வையிட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கட்டடத்தின் பாதுகாப்பு முறைமையை ஏற்படுத்துமாறு கட்டளை பிறப்பித்தார்.

130 மாணவர்கள் பயிலும் இக்கல்லூரியில் பல்வேறுபட்ட சுகாதாரக் குறைபாடுகள் காணப்பட்டதையடுத்து அவைகளையும் சீர்செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மேற்படி விடயங்களை மூன்று மாத காலத்தினுள் நிறைவேற்றுவதாக கல்லூரி நிருவாகத்தினர் இதன்போது உறுதியளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X