2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தமிழ் மொழி மூலமான சேவையை வலியுறுத்தி சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றம்

Thipaan   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாண மாவட்ட செயலங்களில், அரசகரும மொழியான தமிழ் மொழி மூலமாக, பொது மக்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி, சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை கிழக்கு மாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (31)  நிறைவேற்றப்பட்டுள்ளது.

தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் அவசர பிரேரணை கிழக்கு மாகாண சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.

இவ் அங்கிகாரத்தை தெரியப்படுத்தும் பொட்டு, அரச கரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் அம்பாறை, மட்டடக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்ட செயலகங்களின் செயலாளர்களுக்கும் பிரேரணை நகலை அனுப்பி வைக்குமாறு இதன் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் மாகாணமாகும். இம்மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே அதிகம் வாழ்கின்றனர்.

இருப்பினும், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களாக தமிழ் மொழிபேசும் செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை.

அத்துடன் இம்மாவட்ட செயலகங்களில் அரச கரும மொழியான தமிழ் மொழி உரிய முறையில் அமுல்படுத்தப்படாததனால், இம்மாவட்டங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள்  தமது சேவைகளை  தமிழ் மொழியில் பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இலங்கையின் அரசியலமைப்புக்கு ஏற்ப அரச அலுவலகங்களில் அரச கரும மொழியான தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்த்து வழங்கப்படுவது அவசியமாகும்.

எனினும், இம்மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களில் தமிழ் மொழியில் தமிழ் பேசும் மக்கள் சேவையைப் பெற்றுவருதில் மிக நீண்டகாலமாக அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

தமிழ் பேசும் மக்கள் தங்களது மொழி உரிமையைப் பெற்று வாழ்வதற்கும் தங்களது மொழியில் அரச சேவையை பெறுவதற்கும் உரித்துடையவர்கள் என்பதனால், கிழக்கு மாகாண சபையின் ஆட்சியின் கீழ் உள்ள அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள  செயலகங்களில் தமிழ் மொழியில் இம்மாவட்ட மக்கள் சேவையை பெற்றுக் கொள்வதற்கு வழிவகுப்பது இம்மாகாண சபையின் தார்மீகப் பொறுப்பாகும்.

இதன் பிரகாரம், அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களில் அரசகரும மொழிச் செயற்பாட்டை உறுதிப்படுத்தி, இம்மாவட்டங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தங்களுக்கான சேவையினை தமிழ் மொழியில் பெற்றுக்கொள்வதற்கு இச்சபையினூடாக நடவடிக்கை  எடுக்கும் பொருட்டு இந்தத் தனி நபர் பிரேரணை முன்வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X