2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தேசிய அரசு என்ற போர்வையில் கிழக்கில் அரசியல் பழிவாங்கல்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம்.ஹனீபா

தேசிய அரசு என்ற போர்வையில் கிழக்கு மாகாணத்தில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்கின்றன. கிழக்கில் இடம்பெறும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக ஐந்து கட்சிகள் இணைந்து, கிழக்கு மாகாண சபையில் எதிர்க்;கட்சியில் அமர்ந்து செயற்படுவோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, செவ்வாய்க்கிழமை (31) தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையின் அமர்வு தவிசாளர் திரு. சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு நல்லாட்சி நடைபெறுகின்றது என்ற போர்வையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்கின்றன. மூவின மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் இன ஒற்றுமைக்கும் சமாதானத்துக்கும் பெரும் பங்களிப்பு செய்த அரசியல் கட்சிகளையும் ஆதரவாளர்களையும் பழிவாங்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன.
 
மாகாண சபையில் அவசரப் பிரேரணைகள் கொண்டு வந்து பேச வேண்டிய பல முக்கியமான விடயங்கள் இருந்த போதிலும் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைரை பதவியிலிருந்து நீக்குவதற்கான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளீர்கள்.

கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கப்பட்டது. ஆளும் கட்சிக்கு பெரும்பான்மைப் பலம் கிழக்கு மாகாணசபையில் உள்ளது. பிரதித் தவிசாளரை நீக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்திருந்தால் இது தொடர்பாக பிரதித் தவிசாளர் சுபைருடன் கலந்துரையாடி புதிய பிரதித் தவிசாளரை நியமித்திருக்கலாம்.

அதனை விடுத்து நாட்டின் நல்லாட்சிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய பிரதித் தவிசாளரை நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்து பதவியிலிருந்து நீக்கி, தங்களின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற முயல்கின்றனர்.

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏமாற்றி முஸ்லிம் காங்கிரஸ்  ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

தேசிய அரசு கிழக்கில் அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறி முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான அரசியல் கட்சிகளை கிழக்கு மாகாண சபையில் தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸினர் பழிவாங்கி வருகின்றனர். மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்; நமது நாட்டின் அரசியல் கட்சிகளுடன் சிநேக பூர்வமான உறவுகளை பேணி வந்தார். நம்பிக்கையான தலைவராக திகழ்ந்தார். திரு. அசித்த பெரேராவுக்கு எம்.பி பதவியைக் கூட வழங்கினார். இன்றைய முஸ்லிம் காங்கிரஸின் தலைமை, அரசியல் கட்சிகளை பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது எனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X