2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை

Kogilavani   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

ஒலுவில் துறைமுக அபிவிருத்தி நிர்மாணப் பணிக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு முழுமையான நஷ்டஈட்டை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் துறைமுக காணி இழந்தோர் சங்கத்தின் செயளாலர் எம்.ஐ.எம்.அன்சார், இதுதொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் தெரிவித்துள்ளதாவது,

ஒலுவில் துறைமுக அபிவிருத்தி நிர்மாணப்பணிக்காக 2008ஆம் ஆண்டு 48 பேரின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு அதில் 32 பேரின் காணிகளுக்குரிய நட்டஈட்டுத் தொகை அரச விலை மதிப்பீட்டு திணைக்களத்தினால் 2009ஆம் ஆண்டு விலை மதிப்பீடு செய்யப்பட்டது. எஞ்சிய 16 பேரின்  காணிகளுக்கு இதுவரையிலும் விலை மதிப்பீடு செய்யப்படவில்லை.

விலை மதிப்பீடு செய்யப்பட்ட காணி உரிமையாளர்களின் 19 பேர் மட்டுமே மிகவும் போராட்டத்துக்கு  மத்தியில் 1 பேர்ச்சஸ் காணிக்கு 30ஆயிரம் ரூபாய் படி நட்டஈட்டை பெற்றுள்ளனர். கடந்தகால அரசினால் ஒலுவில் துறைமுக அபிவிருத்தி நிர்மாணப்பணிக்காக காணிகளை இழந்தவர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கும் அநீதிகளுக்கும் உட்பட்டுள்ளன.

ஒலுவில் துறைமுகத்துக்கான காணி சுவீகரிப்பு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் அரசியல் பழிவாங்கள் தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்காக 2008ஆம் ஆண்டு காணிகளை இழந்தவர்கள் கடந்தகால அரசினால் அரசியல் பழிவாங்களுக்கும் அநீதிகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டது.

காணிகளை இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு அரச விலைமதிப்பீட்டின்படி கிடைக்க வேண்டிய நஷ்டஈட்டையும் காணி சுவீகரிக்கப்பட்ட தினத்திலிருந்து வழங்கப்பட வேண்டிய தாமதக் கொடுப்பணவுகளையும் பெற்றுத் தருவதற்கு ஆவண செய்யுமாறும் அம் மகஜரில் கேட்கப்பட்டுள்ளது.

இம்மகஜரின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயளாலர் கபீர் ஹாசீம் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X