2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மு.கா.வை விட்டுச்சென்றால் வேறு வழியில்லை: ஹசன்

Gavitha   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

முஸ்லிம்கள் தனித்துவமான ஒரு அரசியல் அடையாளத்தைப் பெறவேண்டும் என்பதற்காகவே மறைந்த மாபெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் ஒரு ஸ்தாபனத்தை அறிமுகம் செய்தார் என சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ. ஹசன் அலி தெரிவித்தார்.

மகளிருக்கான ஐக்கிய சமூக சேவைகள் நலன்புரி ஒன்றியத்தின் காரியாலயம் வெள்ளிக்கிழமை (03) நிந்தவூர் 12ஆம் பிரிவில் திறந்து வைக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் சமூகம் பேரினவாத கட்சிகளின் பின்னால் எந்தவிதமான கொள்கைகளும் சமூகத்துக்கான அடையாளங்களும் இல்லாமல் சென்று கொண்டிருந்த ஒரு ஆபத்தான காலகட்டத்தில், தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் தூரநோக்கான சிந்தனையும் தெளிவான வழிகாட்டுதலும் எமது சமூகத்தின் தனித்துவமான அரசியல் அடையாளத்தைப் பெறுவதற்கு கால்கோலாக அமைந்தது.

அக்காலத்தில் இந்தக்கட்சியை வியாபிப்பதற்கு அவருக்கு பூரணமான ஆதரவை வழங்கிய பிரதேசங்களில் நிந்தவூர் பிரதேசமும் ஒன்றாகும். அந்த வகையில் இன்று அந்தக்கட்சி வளர்ந்து பாரிய விருட்சமாகவும்  தனித்துவமாகவும் அரசியல் பேரம் பேசும் சக்தியாகவும்  மாறியுள்ளதனையிட்டு நாம் பெருமைப்படவேண்டும்.

சமூகத்துக்காக இக்கட்சியினால் கொண்டு செல்லப்படும் இப்பயணத்தில்,  நாம் அனைவரும் தொடர்ந்து ஒன்றாகப் பயணிக்க வேண்டும். இக்கட்சியை விட்டுச் சென்றால் நமக்கு வேறு வழியே இல்லை என்பதனை நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும்.

இவ்வாறான சமூகம் சார்ந்த ஒரு அமைப்பு எமக்கு கிடைத்திராவிட்டால்,  கடந்த பயங்கரவாத காலத்தின் போது நாம் அடக்கி ஒடுக்கப்பட்டு இஸ்லாமிய தமிழர்கள் என்ற நிலைக்கு நிர்ப்பந்தம் செய்யப்பட்டிருப்போம்.

நாங்களும் தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டு பேசி வருவதனால், தமிழ் அரசியல் தலைவர்கள் எம்மை தமிழர்களின் ஒரு பகுதியினர் என்று கூறி வந்தனர். இஸ்லாமியத் தமிழர்கள் என்ற ஒரு அடைமொழிக்குள்தான் எங்களை அவர்கள் வரையறுத்திருந்தார்கள்.

அன்று அவ்வாறு இடப்பட்டிருந்த சங்கிலியை உடைத்துக் கொண்டு நாங்கள் வெளியேறி, இன்று மாபெரும் புரட்சியை செய்து கொண்டிருக்கின்றோம். அதற்காக மர்ஹூம் அஷ்ரப்புக்கு நாம் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றார்.

ஐ.எம். பௌசர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஒன்றியத்தின் தலைவி ஏ.சித்தி றஸீமா உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர். இதன்போது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டு அவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X