2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாவிரதம்

Gavitha   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.சி.அன்சார், எஸ்.எல்.அப்துல் அஸீஸ், ரீ.கே.ரஹ்மத்துல்லா

முஸ்லிம்கள் விடயத்தில்; அரசு தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் முஸ்லிம் மக்களின் தேவைகளையும் உள்ளடக்கக்கோரும் வகையில்  15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, கல்முனை பிரதான வீதியில் கல்முனை பிரதேச சமுகசேவையாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் அடையாள உண்ணாவிரதமொன்றை சனிக்கிழமை (04) காலை மேற்கொண்டார்.

தற்போதைய அரசு வாக்குறுதியளித்த கல்முனை புதிய நகர திட்டம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும், கல்முனைக்குடி பிரதேசத்துக்கென தனியான குடிநீர்த்தாங்கி அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக சுத்தமான குடிநீர் கிடைக்க வழியேற்படுத்த வேண்டும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சவுதி அரேபிய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை வீடமைப்புத்திட்டத்தை பயனாளிகளுக்கு உடனடியாக கையளிக்கப்பட வேண்டும், ஒலுவில் துறைமுக நிர்மாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கப்பட வேண்டும், கல்முனையில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது மீள்குடியேறி வாழும் மக்களுக்கு எதுவித நிபந்தனைகளுமின்றி அவர்களின் வீடுகளுக்கான உறுதிகள் வழங்க வேண்டும், சுனாமியால் தங்களது குடியிருப்பு நிலங்களை இழந்த கல்முனை கிறின்பீல்ட் வீட்டுத்திட்ட மக்களுக்கு 10 பேர்ச் நிலம் அவர்களது குடியிருப்புகளை அண்டிய பிரதேசத்திலேயே வழங்க வேண்டும்.

மேலும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீள்குடியேறிவாழும் இடங்களில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் நிலையங்களை ஏற்படுத்தி இக்குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு வழியேற்படுத்த வேண்டும்.

கல்முனை மாநகர பிரதேசத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காணி உறுதிகள் வழங்கப்படாதுள்ள வர்த்தக நிலையங்களுக்கான காணி உறுதிகள் வழங்கப்பட வேண்டும்.

சுனாமி அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்ட கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
சுனாமி அனர்தத்தினால் சேதமடைந்த கல்முனைக்குடி ஆயள்வேத வைத்தியசாலையை  சகல வசதிகளும் கொண்டதாக கிறின்பீல்ட் வீட்டுத்திட்டத்தை அண்டிய பகுதியில் நிர்மாணிக்கப்பட வேண்டும்.

கல்முனை பொது மைதானம், பிஸ்கால் நிலம் மற்றும் பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான நிலம் என்பன அதன் உறுதிகளில் குறிப்பிட்ட வகையில் சட்டப்படி மீட்டெடுக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்டு மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

சாய்ந்தமருது மீன்பிடிபடகு இறங்குதுறை அபிவிருத்தி செய்வதுடன்  மீனவர்களின் பிரச்சினைகளை ஆராய குழுவொன்றையும் நியமிக்க வேண்டும்.

போதிய இடவசதியும் அடிப்படை வசதியுமின்றி இருக்கும் கல்முனை பொதுச்சந்தை நவீனமயப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் நடைபாதை வியாபாரிகளுக்கென தனியாகவும் சொந்தமாகவும் இட ஒதுக்கீடு செய்யும் பொருட்டு கல்முனை பொதுச்சந்தை விரிவுபடுத்தப்பட வேண்டும்.

கல்முனைக்குடி சாஹிபு வீதி மற்றும் அலியார் வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஏன் இடைநடுவில் கைவிடப்பட்டது என்பது தொடர்பில் விசாரிக்கப்பட்டு மீண்டும் இவ்வீதிகள் உட்பட அனைத்து உள்ளக வீதிகளும் புனரமைக்க வேண்டும். கல்முனை மாநகர அபிவிருத்திக்கென அரசு உயர்மட்டக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்வைத்தே இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X