2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கழிவகற்றல் சேவை சீராக இடம்பெறுவதில்லை என்றுகூறி மகஜர் கையளிப்பு

Kogilavani   / 2015 ஏப்ரல் 07 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

கல்முனை மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும்; கழிவகற்றல் சேவை, சீராக இடம்பெறுவதில்லை என்றும் இதற்கு உரிய நடவடிக்கைகளை மாநகரசபை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரி திங்கட்கிழமை(6) மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது 14, 16, 17ஆம் குறிச்சிகளில் உள்ள அஹமட் வீதி, கே.கே.வீதிகளில் கழிவகற்றல் சேவை சீராக இடம்பெறுவதில்லை என்று கூறியே இம்மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எம்.இப்ராஹீம், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலியிடம் அம் மகஜரைக் கையளித்தார்.

இம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சாய்ந்தமருது 14, 16, 17ம் குறிச்சிகளில் உள்ள அஹமட் வீதி, கே.கே.வீதி எனும் இரு வீதிகளிலும் கழிவகற்றல் சேவை சீராக நடைபெறுவதில்லை.

சாய்ந்தமருதுவில் உள்ள சில வீதிகளில் ஒரு நாளைக்கு இரு தடவைகளும் இன்னும் சில வீதிகளில், வாரத்துக்கு சில தடவைகளும் கழிவகற்றும் சேவையை நடைபெறுகின்றது.

மேற்படி எமது வீதிகளில் மாதத்துக்கு ஒரு தடவை, அதுவும் கால நிர்ணயமற்ற முறையில், விரும்பிய ஒரு தினத்தில் இச்சேவையை நடத்துவதைஇதற்கு முன்னரும் பல தடவைகள் எழுத்துமூலமும் தொலைபேசிகள் மூலமும் அறியத்தந்துள்ளோம்.

ஆனால் எதுவித நடவடிக்கையும் மாநகரசபை நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படுவதில்லை.

இதுஅப்பட்டமான ஒரு மனித உரிமை மீறலாகும். இந்நிலை தொடர்ந்து நீடித்தால்,
1. மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்து நியாயம் பெறுதல்.
2. குப்பைப் பைகளுடன் ஆண்களும் பெண்களுமாக ஊர்வலம்வந்து உங்களைச் சந்தித்தல்.
3. ஊடகங்கள் மூலமாக இதனை நாடறியச்செய்தல்
எனும் வழிமுறைகளைக் கையாண்டு, துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும் எமது வீதிகளை சுத்தம் செய்ய ஏற்ற நடவடிக்கை எடுப்பதென இங்குள்ள மக்கள் கூடித் தீர்மானித்துள்ளோம். என்பதை முதலில் கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆகவே மாநகரசபைக்கும் எமக்கும் இடையில் ஏற்படத் தொடங்கும் முறுகல் நிலையை தவிர்க்க ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த மாநகர ஆணையாளர்,

'இது, குறித்த வீதிகளுக்கு மட்டுமான பிரச்சினை கிடையாது. முழுக் கல்முனை மாநகரமும் தற்போது இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. காரணம் அகற்றப்படும் குப்பைகளை கொட்டுவதற்கான இடவசதி கல்முனை மாநகரப் பிரதேசத்தில் இல்லை. காரைதீவு மற்றும் பள்ளக்காடு ஆகிய இடங்களுக்கு சேகரிக்கப்படும் கழிவுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்கு பாரிய செலவுகளும் ஏற்படுகின்றன.

தற்போது அங்கு கொட்டப்படுவதிலும் சில சிக்கல்கள் தோன்றியுள்ளன. இடைக்கால நடவடிக்கையாக சாய்ந்தமருது கரைவாகுவட்டையிலுள்ள தனியார் காணி ஒன்றில் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது.  

அதுவும் சில காரணங்களால் தற்பொழுது தடைப்பட்டுள்ளது. ஆகையால் இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகள் எதனையும் வழங்க முடியாமல் உள்ளது.

அத்துடன் எமது ஊழியப் படையானது கழிவகற்றும் சேவையை சிறப்புற மேற்கொள்வதற்கு எப்போதும் தயார் நிலையில்தான் உள்ளது. அதனால் அதிகாரிகள் மட்டத்தில் நாங்கள் சேவைக்கு எப்பொழுதும் தயார் நிலையிலேயே உள்ளோம். அகற்றப்படும் கழிவுகளை கொட்டுவதற்கான இடவசதியை ஏற்படுத்திக் கொடுப்பதானது அரசியல் மட்டங்களிலேயே தங்கியுள்ளது' என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X