2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வை புறக்கணித்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி சுமார் 120 பேர் கொண்ட ஒரு குழுவினர்,  ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்துக்கான இரண்டாவது அமர்வு, ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்தில் புதன்கிழமை (08) ஆரம்பமாகியது.

இந்த விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, ஜனாதிபதி அமர்வை புறக்கணித்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி சுமார் 120 பேர் கொண்ட ஒரு சாரார், பிரதேச செயலகம் முன்பாக கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பலரும் வாயில் கறுப்புத் துணிகளைக் கட்டியவாறு தமது கோரிக்கைகயை வலியுறுத்தும் வகையில் வாசக அட்டைகளை ஏந்தியவாறு காணப்பட்டார்கள்.

இந்த ஆணைக்குழு விசாரணையை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என உள்ளூர் சிவில் அமைப்புகளின் வேண்டுகோளின் தொடராகவே இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

உள்நாட்டு ஆணைக்குழு விசாரனைகளில் நம்பிக்கை இழந்திருப்பதால் காணாமல் போன தமது உறவுகள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கை ஆர்பாட்டக்காரர்களினால் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பான மனுவொன்று ஏற்பாட்டாளர்களினால் ஆணைக்குழுவிடமும் கையளிக்கப்பட்டது.
தமிழர் தரப்பில் இந்த விசாரனைக்கு எதிராக புறக்கணிப்பும் ஆர்பாட்டங்களும் நடைபெற்றாலும் விசாரணைக்கென 91 பேர் அழைக்கப்பட்டதுடன் அவர்கள் சமூகமளித்து தமது சாட்சியங்களை வழங்கினர்.

புதிய முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கும் பலர் அங்கு வருகை தந்திருந்தார்கள்.
கல்முனை பிருதேசத்துக்கான இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைகள் கடந்த திங்கட்கிழமை (06) முதல் நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் புதன்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலக மண்டபங்களில் தமது விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதேவேளை வியாழக்கிழமை (09) முஸ்லிம்களுக்கான விசாரணைகளை ஆணைக்குழுவினர் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X