2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொதுசன அமர்வு

Thipaan   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொதுசன அமர்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (08) காலை 8.30 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ள இவ் அமர்வில் ஆணைக்குழுவினால் அழைக்கப்படாமல் புதிதாக 188பேர் இன்று பதிவு செய்துள்ளதாகவும் அழைக்கப்பட்டவர்களுள் 46பேர் சமுகமளித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச தலைமையில் வருகை தந்துள்ள உத்தியோகத்தர்களுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இணைந்து பொதுமக்களின் முறைப்பாடுகளையும் வாய்மூல சாட்சியங்களையும் பதிவுசெய்து வருகின்றனர்.

கடந்தகால உள்நாட்டு யுத்தம் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக காணாமல் போகச் செய்யப்பட்டு தமது உறவுகளைப் பறிகொடுத்த ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் மற்றும் காரைதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் பொது மக்களே சாட்சியமளித்து வருகின்றனர்.

ஆலையடிவேம்பு உட்பட மேற்குறிப்பிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவரும் காலந்தாழ்த்தாது தமது முறைப்பாடுகளைப் பதிவுசெய்யும் பொருட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்;கு உரிய ஆவணங்களின் மூலப்பிரதிகள் மற்றும் போட்டோப்பிரதிகளுடன் தவறாது சமுகமளிக்குமாறு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எவரும் தவறவிட்டுவிடவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் நாளை 09-04-2015, வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணிவரை இதேபோன்றதொரு அமர்வு அக்கரைப்பற்று, நிந்தவூர் மற்றும் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடாத்தப்படும்.

இவ் அறிவித்தலை அக்கரைப்பற்று, நிந்தவூர் மற்றும் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்களும் தமது மேலான கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, சர்வதேச விசாரணையை வலியுறுத்தி காலை பலர் அமைதிப்போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X