2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'கிழக்கு மாகாணக்கல்வியமைச்சு மொழியுரிமையை மீறியுள்ளது'

Gavitha   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாணக்கல்வியமைச்சு மொழியுரிமையை மீறியுள்ளமை  குறித்தும் மாகாணக்கல்வியமைச்சின் வினைத்திறனற்ற செயலாளரை நீக்கிவிட்டு பதிலாக புதிய செயலாளரை நியமிக்குமாறும் கோரி  கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம், கிழக்கு மாகாணக் கல்வியமைச்சருக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்திருப்பதாக அதன் பொதுச்செயலாளர் எஸ். ஜெயராஜா தெரிவித்தார்.

இது தொடர்பாக புதன்கிழமை (22) கிழக்கு மாகாண கல்வியமைச்சர், முதலமைச்சர் ஆகியோருக்கு, கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் அனுப்பி வைத்துள்ள மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'நல்லாட்சியின் பிரதிபலனாக தழிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்த தாங்கள் கிழக்கு மாகாணக்கல்வியமைச்சராக அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று கடமையாற்றத் தொடங்கிய பின்னர், தங்களது அமைச்சு  செயலாளரினால் முதன் முதலில் வெளியிடப்பட்ட கல்வி நிர்வாகம் சம்மந்தப்பட்ட சுற்று நிரூபம், தனிச்சிங்களத்தில் அமைந்திருப்பது அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.           

இதற்கு முன்னர் ஆட்சி செய்த மாகாண நிருவாகத்தில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கல்வியமைச்சராக இருந்தபோது,  சுற்றுநிரூபங்கள் தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டமை மகிழ்ச்சியளித்தது.

80 வீதம் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில்,  கல்வி அமைச்சின் செயலாளர் தனிச் சிங்களத்தில் மாத்திரம் சுற்று நிருபத்தை அனுப்பியிருப்பது ஏன் என்பது பற்றி கல்வியமைச்சு தெளிவுபடுத்துவதோடு, எதிர்காலத்தில் இத்தவறு நடக்காதிருப்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும்.

மேலும் கல்வியமைச்சருக்குத் தெரியாமல் இந்த சுற்றறிக்கை தனிச் சிங்களத்தில் வெளியிடப்பட்டிருக்குமாயின், அதனை உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.

மிக முக்கியமாக, இன சௌஜன்யத்துக்கும் சமூக சகவாழ்வுக்கும் நல்லாட்சிக்கும் குந்தகமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் தற்போதைய கிழக்கு மாகாணக்கல்வியமைச்சின் செயலாளரை நீக்கிவிட்டு,  உடனடியாக தமிழ் பேசும் சமூகத்திலிருந்து ஒரு சிறந்த நிருவாகியை செயலாளராக நியமிப்பது நல்லாட்சிக்கும் இன ஐக்கியத்துக்கும்  எடுத்துக்காட்டாக இருக்கும்.     

அரசியலமைப்பின் பிரகாரம், இலங்கையின் அரச கரும மொழிகளாக தமிழும் சிங்களமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதை இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அதேநேரம் நல்லாட்சியின் வெளிப்பாடாக முதலமைச்சர் செயலகத்தில், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமை முழு நாட்டுக்கும் முன்னுதாரணம் மிக்க செயற்பாடாகும்.

எனவே, கல்வியமைச்சர் இதனைக் கவனத்திற்கொண்டு, தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் தமிழிலும் தேசியகீதம் பாடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் திணைக்களங்களை மேற்பார்வை செய்வதற்கென, முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மாகாணசபை உறுப்பினர் ஆர். துரைரெட்ணத்தை கல்வித் திணைக்களத்தை, மேற்பார்வை செய்வதற்காக நியமித்திருப்பது பொருத்தமானதே'என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தனுக்கும் இந்த மகஜரின் பிரதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .