2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'கிழக்கு மாகாணம் முழு நாட்டுக்குமே சோறு போடக்கூடியது'

Gavitha   / 2015 ஏப்ரல் 29 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் உள்ள வளங்கள் முழு நாட்டுக்கும் சோறு போடக் கூடியது. எனவே கிழக்கில் துரதிருஷ்ட வசமாகப் பிரிக்கப்பட்ட நாம், ஐக்கியப்பட்ட சமூகமாக மீண்டும் இணைந்துள்ளோம். இந்த இன ஐக்கியம் நீடிக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரில் சர்வதேச தரத்திலான ஆடைத் தொழிற்சாலைக்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (28) எறாவூர் ஐயன்கேணியில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்திலிருந்து எந்தவொரு சமூகப் பெண்ணும் எந்தவொரு நாட்டுக்கும் வீட்டுப் பணிப்பெண்ணாகச் செல்லக் கூடாது என்பதை நான் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக கடமையேற்றதிலிருந்து இன்றுவரை வலியுறுத்தி வருகின்றேன்.

இப்பொழுது முதலமைச்சராக இருக்கின்ற போது கூட, அதைத்தான் வலியுறுத்திச் செயற்பட்டு வருகின்றேன். அதன் ஒரு படி முன்னேற்றம்தான் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான ஆடைத்தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

இன்னும் 3 மாதகாலத்தில் இது சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு இயங்கத் துவங்கும். மத்திய கிழக்கில் நான் எனது கல்வி மற்றும் தொழில் என்பனவற்றுக்காக எனது 16 வருடங்களை அங்கு செலவிட்டபோது, நமது பெண்கள் மத்திய கிழக்கில் படும் கஷ்டங்களை நேரில் கண்டு இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று அப்போதே ஆதங்கம் கொண்டவன்.
அங்கு பெண்கள் அனுபவிக்கும் துக்ககரமான வாழ்க்கை முறையை நான் வருடக் கணக்கில் கண்கூடாகக் கண்டு, அதற்கு என்றோ ஒருநாள் முடிவு கட்டவேண்டும் என்று நான் கண்ட கனவு இப்பொழுது மெல்ல மெல்ல பலிக்கத் துவங்கியிருக்கின்றது.

தொடர்ந்தும் மக்களைக் கியூவுக்கு அழைப்பித்து மணிக்கணக்கில் காத்திருக்க வைத்து நிவாரணம் வழங்குகின்ற கலாசாரத்தில் நமது அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் கொள்கைகள் உள்ளன.

அதேபோல நிhரணத்துக்காகவே கால்கடுக்க நாளெல்லாம் காத்திருக்கின்ற கலாசாரத்துக்கு நமது மக்களும் பழக்கப்பட்டுப் போனவர்கள்.

கர்ப்பிணிகள் 2,000 ரூபாவுக்காக கியூவில் நின்று போஷாக்கு உணவுப் பொதி பெறுவதைப் பார்த்து நான் தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டவன்.

எனவே இந்த கொடுக்கின்ற மற்றும் எடுக்கின்ற இருவகை கலாசார மனப்பாங்குகளையும் மாற்றியாக வேண்டும். அதன் ஒரு படியாக இந்த ஆடைத்தொழிற்சாலை அமையும்.

சுயதொழில் வாய்ப்புக்காக சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு நான் முதலீட்டாளர்களுடன் கலந்து பேசி, ஏற்கெனவே 70 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளேன்.

இந்த நிதி மூலம் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 2,000 குடும்பங்கள் நன்மை பெறுவர். இதற்கான வேலைகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையிலே தலா 100 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட கைத்தொழில் பேட்டைகள் அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேபோன்று ஆயிரம் ஏக்கர் கொண்ட இயற்கை விவசாயப் பண்ணையும் அமைக்கப்படும்.' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .