Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 06 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
எமது இதிகாசங்கள் பற்பல கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றன. அவற்றை இவ்வேளைகளில் நாம் பிரதியீடு செய்து பார்க்க வேண்டும். குப்புற கிடந்த நாம் தற்போதுதான் எழும்பி இருக்கின்றோம். இனிமேல் தான் மெல்ல மெல்ல அடிகள் எடுத்து வைக்க வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மூதூர் விவசாய அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்ற சந்திப்பு நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
நாம் தற்போதுள்ள அரசியல் நிலவரங்களைக் கருத்தில் கொண்டு எமது காரியத்தை மிக நுணுக்கமாகவும் துணிவாகவும் சமயோசிதமாகவும் மேற்கொள்ள வேண்டிய காலம் இது. கடந்த காலத்தை விட தற்போது ஒரு சிறிய முன்னேற்றம் வந்துள்ளது என்பதை நாம் ஒத்துக் கொண்டுதான் அடுத்த நகர்வினை நோக்கி செல்ல வேண்டும்.
நாம் அப்போது எதிர்க்கட்சியில் இருக்கும் போது என்ன சொன்னாலும் அங்கு செல்லுபடியாகாது என்ற நிலையில் இருந்தோம். தற்போது ஒரு மாற்றத்தின் மூலம் எமது உறவுகளின் நிலையை இன்னுமொரு பரிணாமத்துடன் கொண்டு செல்ல வேண்டிய நிலையை நுணுக்கமாக கையாண்டு கொண்டிருக்கின்றோம்.
தற்போது மாற்றப்பட்டிருக்கும் அரசாங்கம் ஒரு நிதானமான நிலையில் செல்கின்றது. நாம் சத்தம் போட்டு தூங்குகின்றவனை எழுப்பிவிட முடியும். ஆனால், அவனை எழுப்பியவுடன் ஓட விடக் கூடாது. அவனை சற்று நிதானப்படுத்திய பின்பே ஓட வைக்க வேண்டும் அந்த நிலையில் தான் நாம் இப்போது இருக்கின்றோம்.
தற்போதைய நிலையில் எமது பிரச்சினைகள் தொடர்பில் கேட்கப்படுகின்றன. கேட்கப்படுகின்ற விடயங்கள் அந்தப்பக்கத்தில் இருக்கும் அடுத்த தரப்பினரால் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்பதை அவதானித்து அந்த நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு நாம் எவ்வாறு சிந்திக்கப் போகின்றோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எமது உரிமைப் பிரச்சினையை நாம் ஒருபோதும் கைவிடப் போவதில்லை. அதனைத் தூக்க வேண்டிய நேரம் இருக்கின்றது. தற்போது அதற்காக கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பினை பயன்படுத்த வேண்டும். எமது உணர்வுகளுக்கு மட்டும் இடம்கொடுத்து எமது உரிமைகள் தொடர்பான விடயத்தில் எமக்கு எதிர்த்தரப்பில் இருப்பவர்களை வெற்றியடையச் செய்து விடக் கூடாது.
இத்தனை காலமும் எமக்கு எது எது கிடைக்கக் கூடாது என்று எமக்கு எதிர்த்தரப்பில் இருந்தவர்கள் விரும்பினார்களோ, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய விதத்தில் எமது செய்றபாடுகள் அமைந்ததே தவிர எமது நிலையை வென்றெடுப்பதாக அமையவில்லை என்பதை நாம் ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். எமது 65 வருட கால பிரச்சினையில் தற்போது ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் சற்று சிந்தித்து செயற்பட வேண்டும்.
தற்போது மத்தியில் ஒரு ஸ்திரமற்ற நிலை காணப்படாலும், தற்போது இருக்கின்ற ஜனாதிபதியை மாற்றுவதில் பங்காளியாக இருந்திருக்கின்றோம். அது போல் இனிவருகின்ற அரசைத் தீர்மானிப்பதிலும் பங்காளிகளாக இருக்க வேண்டும். தற்போது எமது தலைவர் சம்மந்தன் ஐயாவை அனைத்து சிறுபான்மையினரின் ஏக பிரதிநிதி என்பதை எமது சகோதர இன கட்சியினரும் ஒத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் இந்த நிலை பற்றி நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
இவ்வாறான மாற்றங்கள் தோற்றம் பெறுகின்றன இந்த நிலைகளை நாம் இன்னும் உறுதிப்படுத்த வேண்டும்.
அடுத்து உருவாக்கப்படும் அரசில் நாமும் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு மீண்டும் ஒரு தேசிய அரசாங்கம் தோற்றுவிக்கப்பட வேண்டும். இதனை மனதில் இருத்தி எமது மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும். இந்த களநிலைமையை உருவாக்குவதிலும் இதனூடாக எமது விடயங்களை முன்னடுப்பதிலும் தான் எமது கைங்கரியம் இருக்கின்றது என்று அவர் தெரிவித்தார்.
31 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
2 hours ago