2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

உள்ளூராட்சி மன்றக்கோரிக்கையை முன்வைத்து ஹர்த்தாலும் கவனயீர்ப்பு போராட்டமும்

Princiya Dixci   / 2015 ஜூன் 15 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,​ ஐ.ஏ.ஸிறாஜ்,எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது நகரசபை கோரிக்கையை வலியுறுத்தி, திங்கட்கிழமை (15) சாய்ந்தமருது பிரதேசத்தில் முழு நாள் ஹர்த்தாலும் கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றது. 

இதனை சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், வர்த்தக சங்கம்,  நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தன.  

இதனையடுத்து வர்த்தக நிலையங்கள், கடைகள், அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுக் காணப்பட்டதுடன் பொதுமக்கள் அனைவரும் காலை 7.30 மணியளவில் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் அணிதிரண்டு விசேட தொழுகையும் துஆ பிரார்த்தனையும் செய்ததுடன் ஏழு அம்சக் கோரிக்கை பிரகடனத்தை ஏகமனதாக மேற்கொண்டனர். 

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை வலியுறுத்தி, முன்வைக்கப்பட்ட பிரகடனம் வருமாறு, 

01. எமது சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் சார்பில் வலுவாக முன்னெடுத்துச் செல்கின்ற ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் மரைக்காயர் சபையினருக்கு இந்த மக்கள் பிரகடனம் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கின்றது. 

02. எமது பள்ளி வாசலின் இந்த முன்னெடுப்பை மழுங்கடிக்கவோ ஏமாற்றி தோற்கடிக்கவோ நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.  

03. சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை வென்றெடுப்பதற்காக எமது ஜூம்ஆ பெரிய பள்ளி வாசல் மரைக்காயர் சபையினர் முன்னெடுக்கும் காத்திரமான நடவடிக்கைகளுக்கு மக்களாகிய நாம் தொடர்ந்தும் ஒன்றுமையுடன் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். 

04. உள்ளூராட்சி அமைச்சரினாலும் எமது அரசியில் தலைமையகளினாலும் வாக்குறுதி அளிக்கப்பட்ட எமக்கான உள்ளூராட்சி சபையை மேலும் காலம் தாழ்த்தாது உடனடியாக வர்த்தமானியில் பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவும். 

05. இலங்கையிலுள்ள அனைத்து பிரதேச சபைகளுக்கும் உள்ளூராட்சி சபைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற போது, சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு மாத்திரம் உள்ளூராட்சி சபையொன்று உருவாக்கப்படாமல் பாராபட்சம் காட்டப்பட்டுவருவதனையிட்டு இந்த மக்கள் பிரகடனம் பெரும் கவலையையும் வன்மையான கண்டனத்தையும் தெரிவத்துக்கொள்கின்றது. 

06. எல்லைப்பிரச்சினை எதுவுமில்லாத எமது ஊருக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தை ஏற்படுத்தாமல் விடுவதற்கு எந்தவொரு போலிக்காரணத்தையும் முனவைக்க முடியாது என்பதை எமது அரசியல் தலைமைகளுக்க இந்த மக்கள் பிரகடனம் மிகவும் ஆணித்தரமாக சொல்லிக்கொள்கின்றது.

07. இன்றைய இந்த அமைதிப் போராட்டமும் துஆ பிரார்த்தனையும் ஆரம்பம் மட்டுமே. எமது கோரிக்கை தொடர்ந்தும் இழுத்தடிப்புச்செய்யப்படுமானால் எமது போராட்டம் வேறு வடிவங்களில் விஸ்வரூபம் பெறும் என்பதை இந்த மக்கள் பிரகடனம் பறைசாற்றுகின்றது என்பனவாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X